பொருளியல்

194நோயும் இன்பமும் இருவகை நிலையிற்
காமம்1 கண்ணிய மரபிடை தெரிய
எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய
உறுப்புடை யதுபோல் உணர்வுடை யதுபோல்
மறுத்துரைப் பதுபோல் நெஞ்சொடு புணர்த்துஞ்
சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச்
செய்யா மரபில் தொழிற்படுத் தடக்கியும்
அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியும்
அறிவும் புலனும் வேறுபட நிறீஇ
இருபெயர் மூன்றும் உரிய வாக
உவம வாயிற் படுத்தலும் உவமம்2
ஒன்றிடத் திருவர்க்கும் உரியபாற் கிளவி.3

என் - எனின். ஒருசார் காமப் பொருண்மைபற்றி நிகழ்வதோர் கிளவி யுணர்த்திற்று.

நோயும் இன்பமும் இருவகை நிலையிற் காமங் கண்ணிய மரபிடை தெரிய எட்டன் பகுதியும் விளங்க ஒட்டிய உறுப்புடையதுபோல் உணர்வுடையதுபோல் மறுத்துரைப்பது போல் நெஞ்சொடு புணர்த்தும் என்பது - துன்பமும் இன்பமும் ஆகிய இருவகை நிலையினையுடைய காமத்தைக் குறித்த மரபு இடையீடுபடுதலான் மெய்ப்பரிவு எட்டாகிய எட்டன் பகுதியும் விளங்கப் பொருந்திய உறுப்புடையது போலவும் உணர்வுடையது போலவும் மறுத்துரைப்பது போலவும் நெஞ்சொடு புணர்த்துக் கூறியும் என்றவாறு.

`காமங்கண்ணிய' என்றதனால் அகப்பொருளாகிய காமமும் புறப்பொருளாகிய காமமும் கொள்ளப்படும். `இடைதெரிய' என்பதனை,

"............ இன்பம்
இடைதெரிந் தின்னாமை நோக்கி மனையாறு
அடைவொழிந்தார் ஆன்றமைந் தார்"

(நாலடி. 54)

என்றாற் போலக் கொள்க. `தெரிய' என்னும் செயவெனெச்சம் ஏதுப் பொருண்மை குறித்து நின்றது. மெய்ப்பாடு எட்டாவது; - நகை, அழுகை, உவகை, இளிவரல், அச்சம், பெருமிதம், மருட்கை, வெகுளி; இவற்றின் பகுதி மெய்ப்பாட்டியலுட் காண்க. இம் மெய்ப்பாடு உறுப்புடையதுபோலச் சொல்லப்பட்ட நெஞ்சின்கட் புலப்பட என்றவாறு.

சொல்லா மரபி னவற்றெடு கெழீஇச் செய்யா மரபிற்றொழிற்படுத் தடக்கியும் என்பது - சொல்லாத மரபினையுடையவற்றேடு கெழுமி அவை செய்யாத மரபை யாண்டுப் படுத்தியவற்றையும் நெஞ்சினைப் போல அடக்கியும் என்றவாறு.

சொல்லாமரபின ஆவன - புள்ளும், மாவும், மரனும், கடலும், கானலும் முதலாயின. செய்யா மரபாவன - தூதாச் சேறலும் வருதலும் உளபோலக் கூறும் அவைபோல்வனவும் பிறவும்.

அவரவருறுபிணி தமபோற் போற்றியும் என்பது - யாவர் சிலர் யாதொரு பிணியுற்றார் அவருற்ற பிணியைத் தாமுற்ற பிணிபோலச் சேர்த்தியும் என்றவாறு.

`அவரவர்' என்பது உயர்திணையாய்க் கூறினும் இருதிணையுங் கொள்ளப்படும்.

"ஒருபாற் கிளவி ஏனைப்பாற் கண்ணும்
வருவகை தானே வழக்கென மொழிப".

(பொருளியல். 27)

என்பதனால்.

அறிவும் புலனும் வேறுபட நிறீஇ இருபெயர் மூன்றும் உரியவாக வுவமவாயிற் படுத்தலும் உவமம் ஒன்றிடத்து என்பது - அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி இருவகைப்பட்ட பெயரும் மூவகைப்பட்ட பொருட்கும் உரித்தாக உவமம் பொருந்துமிடத்து உவமவாயிற் படுத்தலும் என்றவாறு.

வேறுபட நிறுத்தலாவது - தத்தம் நிலைமை யொழிய வென்றவாறு. இருபெயராவது - உவமைப்பெயரும் உவமிக்கும் பெயரும், மூன்றும் உரியவாகும் என்பது - தொழிலும் பண்பும் பயனும். `உவமம் ஒன்றிடத்து' என்றதனை மொழி மாற்றுக.

இருவர்க்கும் உரியபாற் கிளவி என்பது - தலைமகற்குந் தலைமகட்கும் உரியவொரு கூற்றுக் கிளவி என்றவாறு.

அவற்றுள் நெஞ்சொடு புணர்த்தற்கு உதாரணம்:-

"கைகவியாச் சென்று கண்புதையாக் குறுகிப்
பிடிக்கை யன்ன பின்னகந் தீண்டித்4
தொடிக்கை தைவரத் தோய்ந்தன்று கொல்லோ
நாணொடு மிடைந்த கற்பின் வாணுதல்
அந்தீங் கிளவிக் குறுமகள்
மென்தோள் பெறநசைஇச் சென்றஎன் நெஞ்சே".

(அகம் . 9)

என்பது உறுப்புடையது போல உவகைபற்றி வந்தது.

"சென்றதுகொல் போந்ததுகொல்செவ்வி பெறுந்துணையும்
நின்றதுகொல் நேர்மருங்கிற் கையூன்றி - முன்றில்
முழங்குங் கடாயானை மொய்ம்மலர்த்தார் மாறற்கு
உழந்துபின் சென்றஎன் நெஞ்சு."

(முத்தொள்ளாயிரம்.61)

இது அவலம்பற்றி நெஞ்சினை உறுப்புடையதுபோற் கூறிய பெண்பாற் கூற்று.

"உள்ளம் பிணிக்கொண் 5டோள்வயின் நெஞ்சஞ்
செல்லல் தீர்கஞ் செல்வா மென்னும்".6

(நற்றிணை . 284)

என்றவழி உணர்வுடையது போல் இளிவரல் பற்றிவந்த தலைமகன் கூற்று.

"குறுநிலைக் குரவின்சிறுநனை நறுவீ
வண்டுதரு நாற்றம் வளிகலந்7 தீயக்
கண்களி பெறூஉங் கவின்பெறு காலை
யெல்வளை நெகிழ்த்தோற் கல்ல லுறீஇயர்8
சென்ற நெஞ்சம் செய்வினைக் குசாவாய்9
ஒருங்குவரல் நசையொடு வருந்துங் கொல்லோ
அருளா னாகலின் அழிந்திவண் வந்து
தொன்னலன் இழந்தஎம் பொன்னிறம் நோக்கி
ஏதி லாட்டி இவளெனப்
போயின்று கொல்லோ நோதலை மணந்தே."10

(நற்றிணை 56)

இஃது உணர்வுடையது போல் இளிவரல் பற்றி வந்த தலைமகன் கூற்று.

"நின்மொழி கொண்டியானோ விடுவனென் மொழிகொண்11
டென்னெஞ்சம் ஏவல் செயின்."

(கலித்.113)

இது மறுத்துரைப்பது போல் தலைமகன் கூற்று; உவகைபற்றி வந்தது.

"அவர்நெஞ் சவர்க்காதல் கண்டும் எவனெஞ்சே12
நீயெமக் காகா தது."

(குறள்.1261)

இதுவும் மறுத்துரைப்பதுபோல் தலைவி கூற்று: இளிவரல் பற்றி வந்தது.

"இருளிடை மிதிப்புழி நோக்கியவர்
தளரடி தாங்கிய சென்ற தின்றே."

(அகம்.128)

இஃது அச்சம்பற்றி வந்தது. பிறவுமன்ன.

சொல்லா மரபி னவற்றொடு கெழீஇச் செய்யா மரபிற் றொழிற் படுத் தடக்கியும் என்பதற்குச் செய்யுள் :--

"கானலுங் கழறாது கழியுங்13 கூறாது
தேனிமிர் நறுமலர்ப் புன்னையும் மொழியாது
ஒருநின் அல்லது பிறிதியாதும்14 இலனே
இருங்கழி மலர்ந்த கண்போல் நெய்தற்
கமழிதழ் நாற்றம் அமிழ்தென நசைஇத்
தண்டா தூதிய வண்டினங்களி15 சிறந்து
பறைஇய தளருந்16 துறைவனை நீயே
சொல்லல் வேண்டுமால்..."

(அகம் 170)

என்பது தலைவி கூற்று. தலைவன் கூற்று வந்தவழிக் காண்க.

அவரவர் உறுபிணி தமபோற் சேர்த்தியதற்குச் செய்யுள்:--

"பாய்திரை பாடோவாப் பரப்புநீர்ப் பனிக்கடல்
தூவறத் துறந்தனன் துறைவனென் றவன்றிறம்
நோய்தெற உழப்பார்கண் இமிழ்தியோ எம்போலக்
காதல்செய் தகன்றாரை உடையை யோநீ."

(கலித்.129)

பிறவு மன்ன.

அறிவும்புலனும் வேறுபட நிறீஇ உவமவாயிற் படுத்தற்குச் செய்யுள்:--

"ஓங்கெழிற் கொம்பர் நடுவி தெனப்புல்லும்
காந்தட் கிவருங் கருவிளம் பூக்கொள்ளும்
மாந்தளிர்க் கையில் தடவரு மாமயில்
பூம்பொழில் நோக்கிப் புகுவன பின்செல்லும்
தோளெனச் சென்ற துளங்கொளி வேய்தொடும்
நீள்கதுப் பிஃதென நீரற் றறல்புகும்
வாளொளி முல்லை முகையை முறுவலென்று
ஆள்வலி மிக்கான் அஃதறி கல்லான்."

இவை, இடையுங் கையு முதலாகிய உறுப்புக்களைப் பற்றிய உவம வாயிற்படுத்தறியும் அறிவையும் அறியப்படும் பொருளையும் வேறுபட நிறுத்தி உவமம் பொருந்தியவழிக் கூறியவாறு காண்க. வேயைத் தோள் போலுமென்னாது தோளென்று தொட்டமையால் அறியப்படும் பொருள் வேறுபட்டது. அதனைத் திரியக் காண்டலால் அறிவு வேறுபட்டது. பித்துங்களியும் போல் முலையெனச் சென்று வேயைத்தொடும் என்னாது தோளெனச் சென்று வேயைத் தொட்டமையால் உவமம் ஒன்றியவழி உவமவாயிற் படுத்தது.

(2)

1. `காமம் கண்ணிய' என்றதனால் கைக்கிளையும் பெருந்திணையுமாகிய காமத்திற்கு வருவனவும் கொள்க.

(தொல் . பொருள். 196. நச்சி.)

(பாடம்) 2. உவமமொடு.

3. `ஒன்றிடத்து' என்றார் வேண்டியவாறு உவமம் கோடலாகா தென்றற்கு.

(பாடம்) 4. தீண்டித்தன்.

5. துணிகொண்.

6. மெனினும்.

7. வண்டுக்க நாற்ற மவள்கலந்.

8. நெகிழ்த்தோ ரகல வரீஇயர்.

9. உசாவா.

10. நேர்தலை இழந்தே.

11. விடுவென் மற்றென் மொழி கொண்.

12. என்னெஞ்சு.

13. கழனியும்.

14. நீஅல்லது உறுதியாதும்.

15. கழி.

16. பறவை கிளரும்.