என் - எனின். எய்தியதன்மேற் சிறப்பு விதி கூறுதனுதலிற்று. பால்கெழு கிளவி நால்வர்க்கும் உரித்து என்பது - பான்மை கெழுமப்பட்ட கிளவி பெண்பாலா ராகிய நால்வர்க்கும் உரித்தென்றவாறு. நால்வராவார் - தலைவி, தோழி, நற்றாய், செவிலி. அஃதேல் தலைமகளை யொழிய மூவர் என்று அமையாதோ எனின் மேல் தலைமகட்கும் உரித்தென்றார் அவரொடு கூட நால்வர் என வகையறுத்தல் என்பது. நட்பி னடக்கை யாங்கலங் கடையே என்பது - நட்பின் வழங்கும் வழக்கல்லாதவிடத்து என்றவாறு. அஃதாவது, தலைவியொடு தோழி யொழுகும் ஒழுக்கம் அவ்வழியல்லாத விடத்தென்றவாறு. அவன்மாட்டு நிகழ்வது தலைவன் தோழிக் குணர்த்தாது பிரிந்தவழி என்று கொள்ளப் படும். பாற்கிளவி என்பது பயிலாது வரும் ஒரு கூற்றுச்சொல் எனப்பட்டது. அதனைக் கெழுமிய சொல் பால்கெழு கிளவியாயிற்று. ஆண்டு நற்றாய் கூறியதற்குச் செய்யுள்: `கருமணற் கிடந்த பாவை என் அருமக ளே1யென முயங்கினள் அழுமே". (அகம். 165) செவிலி கூறியதற்குச் செய்யுள் :- "தான்தாயாக் கோங்கம் தளர்ந்து2 முலைகொடுப்ப ஈன்றாய்நீ பாவை இருங்குரவே - ஈன்றாய் மொழிகாட்டா யாயினும் முள்ளெயிற்றாள் சென்ற வழிகாட்டாய் ஈதென்று3 வந்து". (திணைமாலை.நூற்.65) தோழி கூறியதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க.(5)
1. பசந்து 2. துறந்தமை
|