என்-எனின். மேற்சொல்லப்பட்ட நால்வர்க்கு முரியதோர் பொருண்மை யுணர்த்திற்று. உயிரும் நாணும் மடப்பமும் என்று சொல்லப் பட்டவை குற்றந் தீர்ந்த சிறப்பினையுடைய தலைமகட்கும் தோழிக்கும் நற்றாய்க்கும் செவிலிக்கும் உரிய என்றவாறு. செயிர்தீர் சிறப்பின் என்றமையான் ஏனையோர் போலாது இவர் நால்வரும் ஒரு நீர்மையர் என்று கொள்க. இதனாற் சொல்லியது என்னை யெனின். இந் நால்வரும் ஆக்கமுங் கேடும் ஒருவர், மாட்டு வந்துழித் தமக்குற்றதுபோல் நினைப்பராதலான் ஒருவரையொருவர் இன்றிமையாது ஓருயிர் போல்வர் எனவும், நாணமும் மடனும் நால்வர்க்கும் ஒக்குமாகலான் அவலமாகிய வழியும் வருத்தமும் ஒக்கும் எனவும் கூறியவாறு. அதற்குச் செய்யுள் : - "இவளே நின்னல திலளே யாயுங் குவளை உண்கண் இவளல திலளே யானும் ஆயிடை யேனே மாமலை நாட மறவா தீமே". என வரும்.(6)
|