என்-எனின். இதுவும் உள்ளுறைப் பாற்படுவதோர் சொல் உணர்த்துதல் நுதலிற்று. மங்கலமொழி முதலாகச் சொல்லப்பட்டனவும் உள்ளுறைப் பாற்படும் என்றவாறு. மங்கலமொழியாவது - மங்கலத்தாற் கூறுஞ்சொல். அது செத்தாரைத் துஞ்சினர் என்றல். அவையல் மொழியாவது இடக்கரடக்கிக் கூறுதல். அது கண் கழீஇ வருதும் என்றல். மாறிலாண்மையிற் சொல்லிய மொழியாவது ஒருவனைச் சிங்கம் வந்த தென்றாற்போற் கூறுவது. அவையெல்லாஞ் சொல்லாற் பொருள்படாமையின் உள்ளுறைப் பாற்படும். இன்னும் இவ்வாற்றாற் பொருள் கொள்ளுமாறு `ஒல்லுவ தொல்லும்' என்னும் புறப்பாட்டினுள் (புறம்.166) `நோயில ராகநின் புதல்வர்' எனவும் `சிறக்கநின்னாளே' எனவும் வரும் மங்கலச் சொல் கெடுக என்னும் பொருள் பட்டவாறு காண்க. "இதுவுமோர் ஊராண்மைக் கொத்த படிறுடைத்து" (கலித். 89) என்றது தீயொழுக்கம் ஒழுகினாய் என இடக்கரடக்கி அவையல் மொழியால் ஒழுக்கக் குறைபாடு கூறியவாறு. (48)
(பாடம்) 1. வைஇய. 2. வைஇய மொழியும் - தலைவன் தம்மை வஞ்சித்தானாகத் தலைவியுந் தோழியுங் கூறலும் ; வைஇயமொழி - தீங்கை வைத்த மொழியுமாம் ; (தொல். பொருள். 244. நச்சி.)
|