பொருளியல்

241சினனே பேதைமை நிம்பிரி1 நல்குரவு
அனைநால் வகையுஞ் சிறப்பொடு வருமே.

என் - எனின். மெய்ப்பாட்டியலுள் நடுவண் ஐந்திணைக்குரிய தலைமக்கட் காகாதன எடுத்தோதுகின்றா ராகலின், அவற்றுள் ஒருசாரன ஒரோவிடத்து வருமென்பது உணர்த்திற்று.

இச் சூத்திரம் எதிரது நோக்கிற்று.

சினமும் பேதைமையும் நிம்பிரியும் நல்குரவும் என்று சொல்லப்பட்ட அந்நான்கு வகையும் யாதானும் ஒரு பொருளைச் சிறப்பித்தல் காரணமாக வரும் என்றவாறு.

"கொடியியல் நல்லார் குரல் நாற்றத் துற்ற
முடியுதிர் பூந்தாது மொய்ம்பின வாகத்
தொடிய வெமக்குநீ யாரை பெரியார்க்கு
அடியரோ ஆற்றா தவர்."

(கலித். 88)

இதனுள் `தொடிய எமக்கு நீ யாரை' என்பது சினம்பற்றி வரினும் காமக் குறிப்பினாற் புணர்ந்த தலைமகள் கூறுதலின் அவள் காதலைச் சிறப்பிக்க வந்தது.

"செவ்விய தீவிய2 சொல்லி அவற்றொடு
பைய முயங்கிய அஞ்ஞான்று அவையெல்லாம்
பொய்யாதல் யான்யாங் கறிகோமற் றைய".

(கலித் . 16)

என்பதனுள் `யான்யாங் கறிகோ' என ஏதம்பற்றி வந்த பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது.

"அகனகர் கொள்ளா அலர்தலைத் தந்து
பகல்முனி வெஞ்சுரம் உள்ளல் அறிந்தேன்
மகனல்லை மன்ற இனி"

(கலித். 19)

என்பதனுள் தலைவி `மகனல்லை' எனல் நிம்பிரியாகிய வெதுப்புப்பற்றி வந்தது.
இதுவும் பிரிவாற்றாமையைச் சிறப்பிக்க வந்தது,

"உடுத்தும் தொடுத்தும் பூண்டுஞ் செரீஇயுந்
தழையணிப் பொலிந்த ஆயமொடு துவன்றி
விழைவொடு வருதி நீயே இஃதோ
ஓரான் வல்சிச் சீரில் வாழ்க்கைப்
பெருநலக் குறுமகள் வந்தென
இனிவிழ வாயிற் றென்னும் இவ்வூரே"3

(குறுந். 295)

இதனுள் `ஒரான் வல்சிச் சீரில் வாழ்க்கை' எனத் தலைமகன் செல்வக் குறைபாடு கூறிப் `பெருநலக் குறுமகள் வந்தென விழவாயிற் றென்னுமவ்வூர்' என்றமையான் நல்குரவு பற்றித்தலைமகனைச் சிறப்பிக்க வந்தது. இச் சூத்திரத்தினுள் வரைந்து கூறாமையின் தலைவியுந் தலைவனுந் தோழியுஞ் செவிலியுங் கூறப்பெறுவர் என்று கொள்க.

(49)

1. நிம்பிரி = பொறாமை தோன்றும் குறிப்பு. (தொல். பொருள். 245. நச்சி.)

(பாடம்) 2. தவ்விய .

3. இன்விழ வாயிற் றென்னும்இவ ளூரே.