பொருளியல்

2421அன்னை என்னை என்றலும் உளவே
தொன்னெறி முறைமை சொல்லினும் எழுத்தினுந்
தோன்றா மரபின என்மனார் புலவர்.

என் - எனின். இதுவுமொருசார் மரபுணர்த்துதல் நுதலிற்று.

அன்னை என்னை என்று சொல்லுதலும் உள; அவை முன்புள்ளார் சொல்லிப்போந்த முறைமை. அவை தாம் சொல்லினானும் சொல்லிற் கங்கமாகிய எழுத்தினானும் பொருள் தோன்றாத மரபினையுடைய என்றவாறு.

எழுத்தென்பது எழுத்தாகப் பிரித்தாற் படும் பொருள் வேறுபாடு. இவை அகத்தினும் புறத்தினும் வரும் .

"ஒரீஇ2 ஒழுகு மென்னைக்குப்
பிரியலென் மன்யான் பண்டொரு காலே".

(குறுந். 203)

என்பது தலைமகள் தலைமகனைக் கூறியது.

"அன்னாய் இவனோர் இளமா ணாக்கன் "

(குறுந். 33)

என்பது தோழிக்குக் கூறியது.

"என்னை முன் நில்லன்மின் தெவ்விர் பலரென்னை
முன்னின்று கன்னின் றவர்".

(குறள். 771)

"என்னை புற்கை யுண்டும் பெருந்தோ ளன்னே."

(புறம். 84)

இவையும் `என்றலும்' என்ற வும்மையால் நிகரனவுங் கொள்க.

"எந்தைதன் உள்ளங் குறைபடா வாறு"


என வரும்.
(50)

1. தலைவன் தலைவியை அன்னையெனக் கூறலும் உளது என்பாரும் உளர். (தொல், பொருள், 246. நச்சி.)

(பாடம் ) 2. ஒரியினன்.