பொருளியல்

243ஒப்பும் உருவும் வெறுப்பும் என்றா
கற்பும் ஏரும் எழிலும் என்றா
சாயலும் நாணும் மடனும் என்றா
நோயும் வேட்கையும் நுகர்வும் என்றாங்கு
ஆவயின் வரூஉங் கிளவி எல்லாம்
நாட்டியல்1 மரபின நெஞ்சுகொளிள் அல்லது
காட்ட லாகாப் பொருள என்ப.

என் - எனின். மேற் பொருட்பாகுபாடு முதல் கருவுரிப் பொருளென உணர்த்தி அவற்றின் பாகுபாடு இத்துணையும் ஓதினார். அவற்றுட் பாகுபடுத்திக் காட்டலாகாதன சிலபொருள் கண்டு அவற்றைத் தொகுத்துணர்த்துதல் நுதலிற்று.

ஒப்புமுதலாக நுகர்ச்சி யீறாக அவ்வழி வருஞ் சொல்லெல்லாம் நாட்டின் வழங்குகின்ற மரபினானே பொருளை மனத்தினான் உணரினல்லது மாணாக்கர்க்கு இது பொருள் என வேறுபடுத்தி யாசிரியன் காட்டலாகாத பொருளையுடைய என்றவாறு.

ஒப்பாவது தந்தையையொக்கும் மகன் என்பது. அவ்விருவர்க்கும் பிறப்பு வேறானவழி ஒப்பாகிய பொருள் யாதென்றார்க்கு இதுவெனக் காட்டலாகாமையின், அவ்விருவரையுங் கண்டான். அவ்வொருவ ரொருவரை ஒக்குமது பிறனொருவன் மாட்டுக் காணாமையிற்றானே யப்பொருண்மையை உணரும் என்பது.

உரு என்பது - உட்கு. அது பயிலாத பொருளைக் கண்டுழி வருவதோர் மன நிகழ்ச்சி. இவருட்கினார் என்றவழி மனத்தினான் உணரக் கிடந்தது.

வெறுப்பு என்பது - செறிவு. அது அடக்கங்குறித்து நின்றது; அவரடக்கமுடையர் என்றவழி அதுவும் மனத்தினான் உணரக் கிடந்தது.

2கற்பு என்பது - மகளிர்க்கு மாந்தர்மாட்டு நிகழும் மன நிகழ்ச்சி. அதுவும் மனத்தான் உணரக் கிடந்தது.

ஏர் என்பது - தளிரின்கண் தோன்றுவதோர் பொலிவுபோல எல்லா வுறுப்பினும் ஒப்பக்கிடந்து கண்டார்க் கின்பத்தைத் தருவதோர் நிறவேறுபாடு. அது எல்லா வண்ணத்திற்கும் பொதுவாகலின் வண்ணம் அன்றாயிற்று. இது வண்ணம் பற்றி வரும். `இவன் ஏருடையன்' என்றால் அதுவும் மனங்கொளக் கிடந்தது.

எழில் என்பது - அழகு. அது மிக்குங் குறைந்தும் நீடியும் குறுகியும் நேர்தி உயர்ந்தும் மெலிதாகியும் வலிதாகியும் உள்ள உறுப்புக்கள் அவ்வளவிற் குறையாமல் அமைந்தவழி வருவதோர் அழகு. இதுவும், `அழகியன்' என்றவழி அழகினைப் பிரித்துக் காட்டல் ஆகாமையின் ஈண்டோதப்பட்டது.

சாயல் என்பது - மென்மை. அது நாயும் பன்றியும் போலாது மயிலுங் குயிலும் போல்வதோர் தன்மை. அதுவும் காட்டலா காமையின் ஈண்டோதப்பட்டது.

நாண் என்பது - பெரியோர் ஒழுக்கத்து மாறாயின செய்யாமைக்கு நிகழ்வதோர் நிகழ்ச்சி. அதுவும் காட்டலாகாது.

மடம் என்பது - பெண்டிர்க் குள்ளதோர் இயல்பு. அது உய்த்துணர்ந்து நோக்காது கேட்டவாற்றாலுணரும் உணர்ச்சி. அதுவும் காட்டலாகாது.

நோய் என்பது - துன்பம். இவன் துன்பமுற்றான் என்றவழி அஃதெத்தன்மையது என்றார்க்குக் காட்டலாகாமையின் அதுவும் ஈண்டோதப்பட்டது.

3வேட்கை என்பது - யாதானும் ஒன்றைப் பெறல்வேண்டுமெனச் செல்லும் மன நிகழ்ச்சி. இவன் வேட்கையுடையான் என்றவழி அஃது எத்தன்மை என்றார்க்குக் காட்டலாகாமையின் ஈண்டோதப்பட்டது.

ஆவயின் வரூஉங் கிளவியெல்லாம் என்றதனான் அன்பு அழுக்காறு பொறை அறிவு என்பனவும் இவைபோல்வனவுங் கொள்க. இவையெல்லாம் அகத்திணை புறத்திணை இரண்டிற்கும் பொது. இவை காட்டலாகாப் பொருள்வாயின் இல்பொருண்மேற் சொன்னிகழ்ந்த வென்றாலோ எனின். இது மேற்கூறப்பட்ட பொருள் பொருளென்பது அறிவித்தல். அவை உள்பொருள் என்பது வருகின்ற சூத்திரத்தான் உரைப்ப.

(51)

1. நாட்டிய.

2. கற்பாவது - தன் கணவனைத் தெய்வமென்று உணர்வதோர் மேற்கோள். (தொல். பொருள். 247. நச்சி.)

3.. வேட்கையாவது : பொருள்கள் மேல் தோன்றும் பற்றுள்ளம் (தொல். பொருள். 247. நச்சி.)