என்பது சூத்திரம் . இச் சூத்திரம் என்னுதலிற்றோவெனின் , பிறர் வேண்டுமாற்றால் சுவையுஞ் சுவைக்குறிப்பும் உணர்த்துதல் நுதலிற்று . பண்ணைத் தோன்றிய என்பது -விளையாட்டாயத்தின்கண் தோன்றிய என்றவாறு , பண்ணையுடையது பண்ணை என்றாயிற்று . எண்ணான்கு பொருளும் கண்ணிய புறனே நானான்கென்ப என்பது- முப்பத்திரண்டு பொருளையுங் குறித்ததன் புறத்து நிகழும் பொருள் பதினாறு என்று சொல்லுவர் என்றவாறு . புறத்து நிகழ்வதனைப் புறம் என்றார் பண்ணைத் தோன்றிய கண்ணிய புறன் எனப் பெயரெச்ச அடுக்காகக் கூட்டுக . அன்றியும் , எண்ணான்கு பொருளுங் கண்ணிய புறன் என ஒரு சொல்நடையாக ஓட்டித் தோன்றிய என்னும் பெயரெச்சத்திற்கு முடிபாக்கினும் அமையும் புறன் என்னும் எழுவாய் நானான்கென்னும் பயனிலைகொண்டு முடிந்தது. ஈண்டுச் சொல்லப்படுகின்ற பதினாறு பொருளும் கற்று நல்லொழுக்கு ஒழுகும் அறிவுடையார் அவைக்கண் தோன்றாமையாற் பண்ணைத் தோன்றிய என்றார். என்னை ? நகைக்குக் காரணமாகிய எள்ளல் அவர்க்கண் தோன்றாமையின் , பிறவும் அன்ன . முப்பத்திரண்டாவன :- நகை முதலானவற்றிற் கேதுவாம் எள்ளல் முதலாக விளையாட்டீறாக முன்னெடுத் தோதப்படுகின்றன , அவற்றைக் குறித்த புறனாவன சுவையும் குறிப்பும் வீரம், அச்சம் இழிப்பு , வியப்பு , காமம் , அவலம் , உருத்திரம். நகை , நடுவுநிலைமை என்றும் , வீரக்குறிப்பு , அச்சக் குறிப்பு , இழிப்புக் குறிப்பு , வியப்புக்குறிப்பு , காமக் குறிப்பு , அவலக் குறிப்பு , உருத்திரக் குறிப்பு , நகைக் குறிப்பு , நடுவு நிலைமைக் குறிப்பு என்றும் சொல்லப்பட்ட பதினெட்டினும் , நடுவுநிலைமையும் அதன் குறிப்பும் ஒழித்து ஏனைய பதினாறுமாம் . வியப்பெனினும் அற்புதமெனினும் ஒக்கும் , காமமெனினுஞ் சிங்காரமெனினும் ஒக்கும் . அவலம் எனினும் கருணையெனினும் ஒக்கும் , உருத்திரம் எனினும் வெகுளியெனினும் ஒக்கும் , நடுவு நிலைமை எனினும் மத்திமம் எனினும் சாந்தம் எனினும் ஒக்கும் . வீரம் என்பது மாற்றாரைக்குறித்து நிகழ்வது , அச்சம் என்பது அஞ்சத்தகுவன கண்டவழி நிகழ்வது. இழிப்பென்பது இழிக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது . ியப்பென்பது வியக்கத்தக்கன கண்டுழி நிகழ்வது , காமம் என்பது இன்ப நிகழ்ச்சியான் நிகழ்வது . அவலம் என்பது இழவுபற்றிப் பிறப்பது , உருத்திரம் என்பது அவமதிப்பாற் பிறப்பது . நகையென்பது இகழ்ச்சி முதலாயினவற்றாற் பிறப்பது , நடுவுநிலைமை யென்பது யாதொன்றானும் விகாரப்படாமை . அவை இற்றாக . மத்திமமென்பதனை ஈண்டொழித்தது என்னையெனின் . "மத்திமம் என்பது மாசறற் தெரியிற் சொல்லப் பட்ட எல்லாச் சுவையொடு புல்லாதாகிய பொலிவிற் றென்ப ."
" நயனுடை மரபின் இதன்பயம் யாதெனிற் சேர்த்தி யோர்க்குஞ் சார்ந்துபடு வோர்க்கும் ஒப்ப நிற்கும் நிலையிற் றென்ப . "
" உய்ப்போ ரிதனை யாரெனின் மிக்கது பயக்குந் தாபதர் சாரணர் சமணர் கயக்கறு முனிவர் அறிவரொடு பிறருங் காமம் வெகுளி மயக்கம் நீங்கிய வாய்மை யாளர் வகுத்தனர் பிறரும் அச்சுவை யெட்டும் அவர்க்கில ஆதலின் அச்சுவை ஒருதலை ஆதலின் அதனை மெய்த்தலைப் படுக்க இதன் மிகவறிந் தோரே ." என்பது செயிற்றியச் சூத்திரம் . இதனானே இது வழக்கிலக்கணம் அன்று என உணர்க.இனி , சுவை2 என்பது காணப்படு பொருளாற் காண்போரகத்தின் வருவதோர் விகாரம் . " இருவகை நிலத்தின் இயல்வது சுவையே . " என்றும்." நின்ற சுவையே ......... ஒன்றிய நிகழ்ச்சி சத்துவம் என்ப . " என்றும் ." சத்துவம் என்பது சாற்றுங் காலை மெய்ம்மயிர் குளிர்த்தல் கண்ணீர் வார்தல் நடுக்கங் கடுத்தல் வியர்த்தல் தேற்றம் கொடுங்குரற்3 சிதைவொடு நிரல்பட வந்த பத்தென மொழிப சுத்துவந் தானே . " என்றும் சார்பொருள் உரைப்ப .அவை வருமாறு : பேயானும் புலியானும் கண்டானொருவன் அஞ்சியவழி மயக்கமுங் கரத்தலும் நடுக்கமும் வியர்ப்பு முளவாகின்றே . அவற்றுள் அச்சத்திற் கேதுவாகிய புலியும் பேயும் சுவைப்படுபொருள் . அவற்றைக்கண்டகாலந்தொட்டு நீங்காது நின்ற அச்சம் சுவை . அதன்கண் மயக்கமும் கரத்தலும் குறிப்பு . நடுக்கமும் வெயர்ப்புஞ் சத்துவம் . இவற்றுள் நடுக்கமும் வியர்ப்பும் பிறர்க்கும் புலனாவது என்று கொள்க ; ஏனைய மனநிகழ்ச்சி பிறவு மன்ன . இவற்றின் பிரிவை நாடகநூலிற் காண்க (1)
1 . பதினாறாயினவாறு என்னையெனின் , வேம்பு முதலாயின பொருளும் அதனோடு நா முதலாயின பொறியும் வேறு வேறு நின்ற வழிச்சுவை என்று சொல்வதே பிறவாமையானும் அவ்விரண்டுங் கூடியவழிச் சுவையென்பது பிறத்தலானும் அவை பதினாறும் எட்டெனப்படும் . இனிக் குறிப்புஞ்சத்துவமும் என்பனவும் உள்ளநிகழ்ச்சியும் உடம்பின் வேறுபாடும் என்பராதலின் அவ்வுள்ள நிகழ்ச்சியை வெளிப்படுப்பது சமத்துவமாகலின் அவை பதினாறும் எட்டாய் அடங்குமாகலின் அவை ஈரெட்டுப் பதினாறாகும் என்பது . ( தொல் , பொருள் , ... பேராசிரியர் ). 2 . சுவைப்பொருள் என்பன , அறுசுவைக்கு முதலாகிய வேம்பும் கடுவும் உப்பும் புளியும் கரும்பும் போல்வன . அவையாமாறு : நகைச் சுவைக்குப் பொருளாவன , ஆரியர் கூறுந் தமிழும் , குருடரு முடவருஞ் செல்லுஞ் செலவும் , பித்தருங் களியரும் சுற்றத்தாரை இகழ்ந்தாரும் குழவி கூறும் மழலையும் போல்வன . ( தொல், பொருள் , .... பேராசிரியர் ) . 3 .பாடம் கொடுகுரல்குண வற்றொடு.
|