மெய்ப்பாட்டியல்

247நகையே அழுகை இளிவரல் மருட்கை
அச்சம் பெருமிதம் வெகுளி உவகையென்று
அப்பால் எட்டாம்1 மெய்ப்பா டென்ப .

என்-னின் . மெய்ப்பாடு ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று .

நகைமுதலாகச் சொல்லப்பட்ட எட்டும் மெய்ப்பாடு என்று சொல்லுவர் என்றவாறு .

மெய்ப்பாடென்பது யாதோவென்னின் .

" உய்ப்போன் செய்தது காண்போர்க் கெய்துதல்
மெய்ப்பா டென்ப மெய்யுணர்ந் தோரே . "

எனச் செயிற்றியனார் ஓதுதலின்.

அச்சமுற்றான் மாட்டு நிகழும் அச்சம் அவன்மாட்டுச் சத்துவத்தினாற் புறப்பட்டுக் காண்போர்க்குப் புலனாகுந் தன்மை மெய்ப்பாடெனக் கொள்ளப்படும் .மெய்யின்கண் தோன்றுதலின் மெய்ப்பாடாயிற்று அஃதேல் , இவ் விலக்கணங் கூத்தினுட் பயன்படல் உண்டாதலின் ஈண்டு வேண்டாவெனின் , ஈண்டுஞ் செய்யுட் செய்யுங்காற் சுவைபடச் செய்யவேண்டுதலின் ஈண்டுங் கூறவேண்டு மென்க .

" உய்த்துணர் வின்றித் தலைவரு பொருளின்2
மெய்ப்பது முடிவது மெய்ப்பாடாகும் . "

(செய்யுளியல் . (196)
என இவ்வாசிரியர் மெய்ப்பாடுஞ் செய்யுளுறுப்பென ஓதினமை உணர்க .

நகை3 என்பது இகழ்ச்சியிற் பிறப்பது . அழகை என்பது அவலத்திற் பிறப்பது . இளிவரல் இழிப்பிற் பிறப்பது , மருட்கை வியப்பிற் பிறப்பது , அச்சம் அஞ்சத் தகுவனவற்றாற் பிறப்பது . பெருமிதம் வீரத்திற் பிறப்பது . வெகுளி வெறுக்கத்தக்கனவற்றாற் பிறப்பது உவகை சிங்காரத்திற் பிறப்பது .

(3)


1 . எட்டே .

2. நகை முன்வைத்த தென்னையெனின் ' பண்ணைத் தோன்றிய எண்ணான்கு பொருட்கும் ' இவை யென்னும் இயல்பில்லனவல்ல என்றதற்கு விளையாட்டுப் பொருட்டாகிய நகையை முன்வைத்தான் என்பது அதற்கு மறுதலையாகிய அழுகையை அதன்பின் வைத்தான் ( தொல் , பொருள் , .....பேரா )

3. எள்ளல் என்பது பிறரை எள்ளி நகுதலும் பிறரால் எள்ளப்பட்ட வழித் தான் நகுதலும் என இரண்டாம் (தொல் , பொருள் , ....... பேரா.)