என் - னின் . நகையும் நகைப்பொருளும் ஆமாறு உணர்த்துதல் நுதலிற்று . எள்ளுதற்பொருண்மை முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நகைப் பொருளாம் என்றவாறு. எனவே காரணம் பற்றி நகையும் நான்காயின. " நகையெனப் படுதல் வகையா தெனினே நகையெனச் செய்வோன் செய்வகை நோக்கு நகையொடு நல்லவை நனிமகிழ் வதுவே." என்பதனான் நகைபடுபொருள் கண்டதன்வழி முறுவலோடு வரும் மகிழ்ச்சிப் பொருளாமாறு நகையாவது என்று கொள்க ." உடனிவை தோன்றும் இடமியா தெனினே முடவர் செல்லுஞ் செலவின் கண்ணும் மடவோர் சொல்லுஞ் சொல்லின் கண்ணும் கவற்சி பெரிதுற் றுரைப்போர்க் கண்ணும் பிதற்றிக் கூறும் பித்தர் கண்ணுஞ் சுற்றத் தோரை இகழ்ச்சிக் கண்ணும் மற்று மொருவர்கட் பட்டோர்க் கண்ணுங் குழவி கூறு மழலைக் கண்ணும் மெலியோன் கூறும் வலியின் கண்ணும் வலியோன் கூறும் மெலிவின் கண்ணும் ஒல்லார் மதிக்கும் வனப்பின் கண்ணுங் கல்லார் கூறுங் கல்விக் கண்ணும் பெண்பிரி தன்மை யலியின் கண்ணும் ஆண்பிரி பெண்மைப் பேடிக் கண்ணும் களியின் கண்ணுங் காவாலி கண்ணும் தெளிவிலார் ஒழுகும் கடவுளார் கண்ணும் ஆரியர் கூறுந் தமிழின் கண்ணும் காரிகை யறியாக் காமுகர் கண்ணும் கூனர் கண்ணும் குறளர் கண்ணும் ஊமர் கண்ணும் செவிடர் கண்ணும் ஆன்ற மரபின் இன்னுழி எல்லாந் தோன்றும் என்ப துணிந்திசி னோரே." என இவ்வகையெல்லாம் உளவெனச் ( செயிற்றியனார் ) ஓதுதலின் . அவை நான்காகியவாறு என்னையெனின் . முடவர் செல்லுஞ் செலவு எள்ளுதற் பொருண்மை யாயிற்று ; மடவோர் சொல்லுஞ் சொல் மடமைப் பொருண்மை யாயிற்று ( கவற்சி பெரிதுற்றுரைப்போர் கூற்றுப் பேதைமையாயிற்று ; குழவிகூறு மழலை இளமைப் பொருளாயிற்று ; ஏனைய வெல்லாம் இவற்றின்பாற் படுதல் காண்க . புணர்ச்சி நிமித்தமாகக் கூற்று நிகழ்ந்துழி வரும் நகை இளமை என்பதனாற் கொள்க . இப் பொருண்மை செயிற்றியத்தில் ' வலியோன் கூறும் மெலிவு ' என்பதனாற் கொள்க . மடம் என்பதற்கும் பேதைமை என்பதற்கும் வேறுபாடு என்னை யெனின் , மடம் என்பது பொருண்மை யறியாது திரியக் கோடல் ; பேதைமை யென்பது கேட்டதனை உய்த்துணராது மெய்யாகக் கோடல் . எள்ளல் இளமை எனப் பொதுப்பட்டு நின்றமையால் தன்மாட்டு நிகழும் வழியுங் கொள்க . உதாரணம் "நகையாகின்றே தோழி " என்னும் நெடுந்தொகைப் பாட்டினுள்." தண்துறை ஊரன் திண்தார்1 அகலம் வதுவை நாளணிப் புதுவோர்ப் புணரிய பரிவொடு வரூஉம் பாணன் தெருவிற் புனிற்றாப் பாய்ந்தெனக் கலங்கி யாழிட்2 டெம்மனைப் புகுதந் தோனே அதுகண்டு3 மெய்ம்மலி உவகை மறையினென்4எதிர்சென் றிம்மனை அன்றஃதும்மனை யென்ற என்னுந் தன்னும் நோக்கி மம்மர் நெஞ்சினோன்5 தொழுதுநின்றதுவே ." (அகம் . 56 ) எனக்கூறி ' நகையாகின்றே தோழி ' என்றமையின் எள்ளல்பற்றி நகை தோன்றிது. எனவும் வந்தவழிக் காண்க .(4)
1. தண்தார் 2. அழிபட் 3. அவற்கண்டு 4. உவகையென். 5. நெஞ்சினன்
|