என்-னின் வெகுளியாமாறும் அதற்குப் பொருளும் உணர்த்துதல் நுதலிற்று. உறுப்பறை முதலாகச் சொல்லப்பட்ட நான்கினாலும் வெகுளி பிறக்கும் என்றவாறு. இப்பொருள் நான்குந் தான் பிறரைச் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும்; தன்னைப் பிறர் செய்யுங்காலும் வெகுளி பிறக்கும் என்று கொள்க. உறுப்பறையாவது-அங்கமாயினவற்றை அறுத்தல். குடிகோளாவது-கீழ்வாழ்வாரை நலிதல். அலை என்பது-வைதலும் புடைத்தலும். கொலை என்பது-கொல்லுதற் கொருப்படுதல். ஊடற்கண்ணும் வெகுளி தோற்றுமால் எனின், அஃது இன்பத்திற்குக் காரணமாதலால் தலைமகள் புருவநெரிவும் வாய்த்துடிப்புங் கண்ட தலைமகற்கு வெகுட்சிபிறவாது உவகை பிறக்கும். தலைமகன் வெகுளுவனாயின் அதன்பாற்படும். "உறுதுப் பஞ்சாதுடல்சினஞ் செருக்கிச் சிறுசொற் சொல்லிய சினங்கெழு வேந்தரை அருஞ்சமந் ததையத் தாக்கி முரசமொ டொருங்ககப் படேஎ னாயின்." (புறம்.72) என்பது வெகுளிபற்றி வந்தது .பிறவு மன்ன.(10) 1. என்ற 2. குடிகோள் என்பது தாரமும் சுற்றமும் குடிப்பிறப்பும் முதலாயவற்றுக்கண் கேடுசூழ்தல்(தொல்,பொருள்,....பேரா)
|