மெய்ப்பாட்டியல்

255செல்வம் புலனே புணர்வுவிளை யாட்டென1
அல்லல் நீத்த உவகை2 நான்கே.

என்-னின் உவகை யாமாறும் அதன்பொருளும் உணர்த்துதல் நுதலிற்று.

செல்வ நுகர்ச்சியானும். கண்டுகேட் டுண்டுயிர்த்துற்றறியும் ஐம்புலன்களான் நுகர்தலானும். மகளிரொடு புணர்தலானுஞ் சோலையும் ஆறும் புகுந்து விளையாடும் விளையாட்டினானும் உவகை பிறக்கும் என்றவாறு.

"ஒத்த காமத் தொருவனும் ஒருத்தியும்
ஒத்த காமத் தொருவனொடு பலரும்
ஆடலும் பாடலுங் கள்ளுங் களியும்3
ஊடலும் உணர்தலுங் கூடலு மிடைந்து
புதுப்புனல் பொய்கை பூம்புனல் என்றிவை
விரும்புறு மனத்தொடு விழைந்து நுகர்தலும்
பயமலை மகிழ்தலும் பனிக்கடல் ஆடலும்
நயனுடை மரபின் நன்னகர்ப் பொலிதலும்
குளம்பரிந் தாடலும் கோலஞ் செய்தலும்
கொடிநகர் புகுதலும் கடிமனை விரும்பலும்
துயிற்கண் இன்றி இன்பந் துய்த்தலும்
அயிற்கண் மடவார் ஆடலுள் மகிழ்தலும்
நிலாப்பயன் கோடலும் நிலம்பெயர்ந் துறைதலும்
கலம்பயில் சாந்தொடு கடிமல ரணிதலும்
ஒருங்கா ராய்ந்த இன்னவை பிறவும்
சிருங்கா ரம்மென வேண்டுப இதன்பயன்
துன்பம் நீங்கத் துகளறக் கிடந்த
இன்பமொடு புணர்ந்த ஏக்கழுத் தம்மே."

எனச் செயிற்றியனார் விரித்தோதினா ராயினும் இவையெல்லாம் இந் நான்கினுள் அடங்கும்.

"தம்மி லிருந்து ல்மதுபாத் துண்டற்றால
அம்மா அரிவை முயக்கு."

(குறள். 1107)
என்றவழித் தம்மிலிருந்து தமது பாத்துண்ட செல்வ நுகர்ச்சி, முயக்கம்-புணர்பு.

"வையை வருபுனல் ஆடல் இனிதுகொல்
செவ்வேற்கோ குன்ற நுகர்தல் இனிதுகொல்
வைவ்வேல் நுதியன்ன கண்ணார் துணையாக
எவ்வாறு செய்வாங்கொல் யாமென நாளும்
வழிமயக் குற்று மருடல் நெடியான்
நெடுமாடக் கூடற் கியல்பு."

(பரிபாடல்)
எனவரும் பிறவு மன்ன.

(11)


1. (பாடம்)விளையாட்டென்று

2. அல்லல் நீத்த உவகை என்றதனால் பிறர் துன்பங் கண்டுவரும் உவகையும் உவகை எனப்படாதென்பது. இதுவுந் தன்கண் தோன்றிய பொருள்பற்றி வரும் என்றார்க்குப் பிறன்கண் தோன்றிய இன்பம் பற்றியும் உவகை பிறக்கும் அஃதெப்பாற் படுமெனின், அதுவும் அல்லல் நீத்த உவகை என்றதனான் உவகை எனப்படும்(தொல். பொருள்.259.பேரா.)

3.(பாடம்)களியும்.