மெய்ப்பாட்டியல்

257 புகுமுகம் புரிதல் பொறிநுதல் வியர்த்தல்
நகுநய மறைத்தல் சிதைவுபிறர்க் கின்மையொடு
தகுமுறை நான்கே ஒன்றென மொழிப.

என்-னின் மேல் அகத்திணைக்கும் புறத்திணைக்கும் பொதுவாகிய மெய்ப்பாடு உணர்த்தி இனி அகத்திற்கே யுரியன உணர்த்துகின்றார் முற்பட்ட அவத்தை பத்தினும் முதலவத்தைக்கண் பெண்பாலார் குறிப்பினால் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று.

புகுமுகம் புரிதல் என்பது-தலைமகன் புணர்ச்சிக் குறிப்பினனாய்ப் புகுது முகத்தினை மாறுபடாது பொருந்துதல்.

அஃதாவது

"கூற்றமோ கண்ணோ பிணையோ மடவரல்
நோக்கம்இம் மூன்றும் உடைத்து."

(குறள்.1085)
என்றாற்போலக் கூறியவழி ஒருவாதுநிற்றல்.

பொறிநுதல் வியர்த்தல் என்பது - அவ்வழி முகம்புக்கு அவனைப் பொருந்திய தலைமகள் உட்கும் நாணும் வந்துழி வரும் நுதல் வியர்ப்பு.

நகுநய மறைத்தல் என்பது- அதன்பின்னர்த் தலைமகன் கூறுவன கேட்டு நகைவந்துழி நயத்தலாகிய விருப்பத்தினைப் புலனாகாமை மறைத்தல்.

சிதைவு பிறர்க்கின்மை என்பது- தன் மனனழிவு பிறர்க்குப் புலனாகாமை நிற்றல்.ஓடு எண்ணின்கண் வந்தது.

தகுமுறை நான்கே யொன்றென மொழிப என்பது - இவ்வாறு தகுதியுடைத்தாய்முறைப்படவருவன நான்கும் முதல் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு என்றவாறு.

(13)


1. புகுமுகம் புரிதல் என்பது ஒருவனும் ஒருத்தியும் எதிர்ப்பட்ட வழித்தன்னை அவன் நோக்குதற்கண் விரும்பும் உள்ள நிகழ்ச்சி; புகுதல் என்பது தலைமகன் நோக்கிய நோக்கெதிர் தான் சென்று புகுதல்; முகம் என்பது அங்ஙனம் தான் புகுதற்கிடமாகிய நோக்கு; நோக்கெதிர் நோக்குதலை முகநோக்குதல் என்பவாகலின் இந்நோக்கினைமுகம் என்றான் என்பது. புரிதல் என்பது, மேவுதல் என்றவாறு; அஃதாவது, தலைமகன் காண்டலைத் தலைமகள் வேட்டல் என்றவாறாம்..........

ஒன்றெனமொழிப களவிற்கு முதற் கூறென்ப......(தொல்,பொருள்.261.பேரா.)