என்-னின். இரன்டாம் அவத்தையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. கூழைவிரித்தல் முதலாகச் சொல்லப்பட்ட முறைமையுடைய நான்கும் இரண்டாம் அவத்தைமெய்ப்பாடு என்றவாறு. கூழைவிரித்தலாவது - மேல் நகுநயமறைத்தாள் காதன் மேல் வேட்கை செல்லுமாயின் வாளாது நிற்றலாற்றாது மயிரினைக் குலைத்தல். காதொன்று களைதல் என்பது - காதிலணிந்த தொன்றை விழப்பண்ணி யதனைத் தேடுகின்றார் போல நிற்றல். ஊழணி தைவரல் என்பது - முறைமுறையாக அணிந்த வணியைத் தைவருதல் என்றவாறு. உடை பெயர்த் துடுத்தல் என்பது - ஆடையைக் குலைத்துடுத்தல். அவைநான்குங் காமத்திற்குறியிலாதார் தலைமக்கள் முன் செய்யாமையாற்றனது காமக் குறிப்பினானும் அவள் வாளாது நிற்பின் இதற்குக் காரணம் என்னையெனப் பிறர் ஐயப்படாமற் சிறிது பொழுதாயினும் இவ்விடைநிற்கலாகும் எனவும் இவை நிகழ்த்தும் என்றவாறு. 1. கூழைவிரித்தல் என்பது மெய்யும் தீண்டியவழி மெல்லியல் மகளிர்க்கு வரும் வேறுபாடு நான்கனுள் முதற்கண்ணதெனப்படும்; என்னை? தன்னுள்ளத்தில் நிகழ்ந்த வேறுபாட்டினை அக்காலத்துத் தலைமகள் நிறையுடையளாகலான் கரந்தொழுகுதற்பாலள் அல்லளே, அங்ஙனம் கரக்குங்கால் தன்வயத்ததாகிய உடம்புபற்றி வரும் வேறுப்பாட்டினைத் தாங்கும்; அங்ஙனம் தாங்குங்கால் உடம்பொடு தொடர்புடையவாகி வேறுபட்ட தலைமயிரினது முடி உள்ள நெகிழ்ச்சியானே தன் வயத்தன்றி ஞெகிழும் ஆகலின் இது முற்கூறப்பட்டது. (தொல்.பொருள்.262.பேரா.)
|