என்-னின். மூன்றாம் அவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. அல்குல் தைவரல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் மூன்றாம் அவத்தை மெய்பாடென்க என்றவாறு. அல்குல் தைவரல் என்பது - மேல் உடை பெயர்த்துடுத்தவள் அதனைப் பேணும் மதிப்பு உள்வழி தம்மைப்பேணுதல் பெண்டிர்க்கு அழகு. அணிந்தவை திருத்தலும் அவ்வாறே கொள்க. இல்வலி யுறுத்தல் என்பது- தமது இல்லதோர் வலியுறுத்தல். அது சாரநினைத்தாரைத் தமது இற்பிறப்புச் சொல்லி இசைவில்லாரைப்போல மறுத்துக்கூறுதல். இருகையு மெடுத்தல் என்பது-அவ்வழி மறுத்த வாய் பாட்டாற் கூறினும் இரண்டிகையினையும் பிறிதோர் காரணம் பற்றிக் கிளர்த்தல் . தலைமக்கள் முன்னர்ப் பெண்டிர் கை கிளர்த்தாராதலாற் புணர்ச்சிக் கொருப்பட்ட வுள்ளத்தாள் கிளர்த்துமென்க. இதனாற் பயன் நாண்நீங்கல். 1. இல்வலியுறுத்தல் என்பது, புணர்ச்சியை வேன்டாதாள் போல்வதோர் வன்மைபடைத்துக் கொண்டு செய்தல்; என்னை? இல்லாத வலியை மிகுத்தல் என்றமையின் அப்பொருட்டாயிற்று...... இனி இற்பிறத்தலான் அதன்வலி தோற்றுவதெனவும் சொல்லுப. (தொல்.பொருள்.263.பேரா.)
|