என்-னின். நான்காம் அவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று. பாராட்டெடுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் நான்காமவத்தைக்கண் நிகழும் மெய்ப்பாடென்க. பாராட்டெடுத்த லாவது - தலைமகன் நின்றநிலையுங் கூறிய கூற்றையும் தனித்த வழியும் எடுத்து மொழிதல். மடந்தப வுரைத்தல் என்பது- பெண்டிரது இயல்பாகிய மடப்பங் கெடச் சில கூறுதல். அது தலைமகன் கூற்று நிகழும் வழி யதற்கு மாற்றங் கொடுத்தலன்றித் தன் வேட்கை தோன்றக் கூறுஞ் சொல். ஈரமில் கூற்ற மேற்றலர் நாணல் என்பது - ஊராருஞ் சேரி யாருங் கூறும் அருளில்லாத கூற்றைக் கேட்டு அலர் ஆயிற்றேன நாணுதல். கொடுப்பவை கோடல் என்பது - கண்ணியாயினுந் தழை யாயினும் பிறவாயினும் தலைமகன் கொடுத்தவற்றைக் கோடல். மனத்தினான் உரிமை பூண்டானல்லது பிறன் பொருள் வாங்காமையின் இதுவுமோர் மெய்ப்பாடாக ஓதப்பட்டது. (16) 1. மடந்தப உரைத்தல்- விளையாடும் பருவத்து நிகழ்ந்த அறிமட நீங்கக் காமப் பொருட்கண்ணே சிறிதறிவு தோன்றுதலும் உரைத்தல் என்றதனால் அக்காலத்துப் பாங்கிக்குச் சில கூற்று மொழி கூறவும் பெறும் என்பது கொள்க. அவை மேலை ஓத்துகளுள் கூறப்பட்டன.மடந்தப உரைத்தற்கு ஏதுவாகிய கருத்து ஈண்டு மெய்ப்பாடெனப்படும். (தொல். பொருள்.264.பேரா)
|