மெய்ப்பாட்டியல்

261தெரிந்துடம் படுதல் திளைப்புவினை மறுத்தல்
கரந்திடத் தொழிதல் கண்டவழி உவத்தலொடு
பொருந்திய1 நான்கே ஐந்தென மொழிப.

என்-னின். ஐந்தா மவத்தைக்கண் வரும் மெய்ப்பாடு நிகழுமிடம் உணர்த்துதல் நுதலிற்று.

தெரிந்துடம்படுதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஐந்தாம் அவத்தைக்கு மெய்ப்பாடாம் என்றவாறு.

தெரிந்துடம் படுதலாவது-தலைமகன் கொடுப்பவை கொண்ட தலைமகள் ஆராய்ந்து உடம்படுதல் என்றவாறு. ஆற்றாமை பெருகுகின்ற காதலின் இத்துணையும் மறத்தவள் உடம்படுதல் என்றார். அவ்வழியுந் தெரிந்துடம்படுதல் என்றமையால் ஆராய்ந்தல்லது புணர்ச்சிக்கு உடம்படாமை கொள்க.

திளைப்புவினை மறுத்தல் என்பது - விளையாட் டாயமொடு திரிவாள் வேட்கை நலிதலான் அவ்விளையாட்டு வினையை மறுத்தல் என்றவாறு.

கரந்திடத்தொழிதல் என்பது - தலைமகனைக் காண்டல் வேட்கையால் ஒளித்துப் படத்தினின்று மொழிதல் என்றவாறு.

கண்டவழி யுவத்தல் என்பது - தலைமகனைக்கண்டவழி மகிழ்தல் என்றவாறு.

(17)


1. பொருந்திய நான்கென்றது இவை இடையறவின்றி ஒருங்கு தொடர்தலுமுடைய என்பது. இதனானே இவை நன்னான்கினோடு வருகின்றதற்குச் சிறிது இடையறவும் படு மென்பது கொள்க... இங்ஙனம் பொருத்தமின்றி வருவனவல்ல நன்னான்கு பகுதியாற் கூறியவை தம்முள் தாம் என்பான் பொருந்திய நான்கென்பது.(தொல். பொருள்.265.பேரா)