என்-னின். ஆறாம் அவத்தைக்கண்வரும் மெய்ப்பாடு நிகழுமாறு உணர்த்துதல் நுதலிற்று. புறஞ்செயச் சிதைதல் முதலாகச் சொல்லப்பட்ட நான்கும் ஆறாம் அவத்தைக்கண் மெய்ப்பாடாம் என்றவாறு. புறஞ்செயச் சிதைத லாவது - தலைமகன் கோலஞ் செய்யும்வழி யதற்கு மகிழ்ச்சியின்றிச் சிதைவுடையளாதல். புலம்பித் தோன்ற லாவது - பொலிவழிந்து தோன்றல். கலங்கி மொழிதல் என்பது - கூறுங்கூற்றுக் கலக்கமுற்றுக் கூறுதல். கையறவுரைத்த லாவது - செயலறவு தோன்றக் கூறல். இச் சொல்லப்பட்ட ஆறு அவத்தையும் பெண்பாலார் எல்லார்க்கும் பொது. இவை புணராதவழித் தோன்றுதல் பெரும்பான்மை. 1. கையற வுரைத்தல் என்பதனை ஈற்றுக்கண் வைத்தான் களவொழுக்கத்தினுள் இதனினூங்கு மெய்ப்பாடு கூறப்படாதென்றற்கு; என்னை காரணமெனின், கையறவுரை தோன்றியதற் பின்னர் நிகழ்வன கைக்கிளைக்கும் பெருந்திணைக்கும் மெய்ப்பாடாவதன்றி நற்காமத்துக் காகாவென்பது கருத்து;.........கையறவு உரைத்தல் என்றதனான் இம்மெய்ப்பாடு மனத்தவேயன்றி மாற்றத்தானும் பிறர்க்குப் புலனாக வெளிப்படு மென்பது கொள்க. (தொல். பொருள்.266.பேரா.)
|