மெய்ப்பாட்டியல்

266இன்பத்தை வெறுத்தல் துன்பத்துப் புலம்பல்
எதிர்பெய்து பரிதல் ஏதம் ஆய்தல்
பசியட நிற்றல் பசலை பாய்தல்
உண்டியிற் குறைதல் உடம்புநனி சுருங்கல்
கண்துயில் மறுத்தல் கனவொடு மயங்கல்
பொய்யாக் கோடல் மெய்யை என்றல்
ஐயஞ் செய்தல் அவன்தம ருவத்தல்
அறனழித் துரைத்தல் ஆங்குநெஞ் சழிதல்
எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல்
ஒப்புவழி யுறுத்தல் உறுபெயர் கேட்டல்
நலத்தக நாடிற் கலக்கமும் அதுவே.

எனு-னின். மேல் நடுவ வனணந்தினைப் பகுதியாகிய களவிற்கும் கற்பிற்கு முரிய மெய்ப்பாடு உணர்த்தி, அதன்பின் கைக்கிளைக்குரியவாமாறு உணர்த்தினார். இனி இச்சூத்திரத்தாற் பெருந்திணைக் குரிய மெய்ப்பாடு உணர்த்துதல் நுதலிற்று.

இன்பத்தை வெறுத்தல் முதலாகச் சொல்லப்பட்ட இருபதும் ஆராயின் நடுவணைந்தினை யல்வழி வரும் என்றவாறு.

அது என்பது - அவையுமுளவே யவையலங்கடையே என்பதைச் சுட்டி நின்றது. கலக்கமும் நாடின் என மாறுக. ஏற்புழிக்கோடல் என்பதனாற் பெருந்திணைப்பாற் கொள்ளப்படும். இது களவிற்கும் கற்பிற்கும் ஒக்கும். இவை தேறுதலொழிந்த காமத்தின்பாற்படுவனவும் மிக்க காமத்தின் மிடலின்பாற் படுவனவுமாம். (அகத்தினை 54)

இன்பத்தை வெறுத்தல் என்பது - கோலஞ்செய்தல் முதயினவற்றை வெறுத்தலும் தென்றலும் நிலவுமுதலாயினவற்றை வெறுத்தலும் தென்றலும் இவ்வாறு களவின்கண் வரிற் பிறர்க்கும் புலனாம். கற்பின்கண் வரிற் பிறர் இயல்வழி மயங்கல மின்றாம்.

" கண்ணுள்ளார் காத லவராகக் கண்ணும்
எழுதேங் கரப்பாக் கறிந்து."

(குறள். 1127)


" சிறுகுழல் ஓசை செறிதொடிஇ வேல்கொண்
டெறிவது போலும் எமக்கு."
எனவரும்.

துன்பத்துப் புலம்ப லாவது-துன்பத்தின் கண்ணே புலம்புறுதல்.

"இன்பங் கடல்மற்றுக் காமம்1 அஃதடுங்கால்
துன்பம் அதனிற் பெரிது."

(குறள். 1166)
எனவரும்.

எதிர்பெய்து பரிதல் என்பது - தலைமகன் முன்னின்றி அவனின்றாகப் பெய்துகொண்டு வருந்துதல்.

"கண்ணுள்ளிற் போகார் இமைபபிற் பருவரார்
நுண்ணியர்எங் காத லவர்"

(குறள். 1126)
எனவரும்.

ஏதமாய்தல் என்பது - குற்றமாராய்தல்.

"துப்பின் எவனாவர் மற்கொல் துயர்வரவு
நட்பினுள் ஆற்று பவர்"

(குறள். 1165)
எனவரும்.

பசியட நிற்றல் என்பது - உண்ணாமை.

"நெஞ்சத்தார் காத லவராக வெய்துண்டல்
அஞ்சுதும் வேபாக் கறிந்து."

(குறள். 1128)

பசலை பாய்தல் என்பது - பசலை பரத்தல்

"பசந்தாள் இவளென்ப தல்லால் இவளைத்
துறந்தார் அவரென்பார் இல்"

(குறள். 1188)
எனவரும்.

உண்டியிற் குறைதல் என்பதுஉணவு சுருங்குதல்.

"பாலும் உண்ணான் பழங்கண் கொண்டு"

(அகம். 48)
எனவரும்.

உடம்பு நனிசுருங்கல் என்பது - உண்ணாமை காரணமாகத் தன்னுடம்பு மிகச் சுருக்கமுறுதல்.

"பணைநீங்கிப் பைந்தொடி சோருந் துணைநீங்கித்
தொல்கவின் வாடிய தோள்."

(குறள். 1234)
எனவரும்.

கண்டுயின் மறுத்தல் என்பது - உறங்காமை.

"மன்னுயிர் எல்லாந் துயிற்றி அளித்திரா
என்னல்ல தில்லை துணை."

(குறள். 1168)
எனவரும்.

களவொடு மயங்கல் என்பது - கனவை நனவென மயங்குதல்.

"நனவினால் நல்காக் கொடியார் கனவினால்
என்னெம்மைப் பீழிப் பது."

(குறள். 1217)
எனவரும்.

பொய்யாக் கோடல் என்பது - தலைவன் கூற்றுத்தன்னைப் பொய்யாகக் கோடல்.

"வாயல்லா வெண்மை யுரையாது சென்றீநின்
மாய மருள்வா ரகத்து. "

(கலித். 88)

மெய்யே யென்றல் என்பது - உரைத்த மாற்றத்தை மெய்யெனக் கூறுதல்.

ஏகாரம் வினா.

"மெய்யே வாழி தோழி சாரல்
மைப்பட் டன்ன மாமுக முசுக்கலை
யாற்றப் பாயத் தப்பல் ஏற்ற
கோட்டொடும் போகி யாங்கு நாடன்
தான்குறி வாராத் தப்பற்குத்
தாம்பசந் தனவென் தடமென் தோளே."

(குறுந். 121)

இதனுட் 'கூறியது ' என ஒரு சொல் வரவேண்டும்.

ஐயஞ் செய்தல் என்பது - தலைவன் குறிப்புக் கண்டு ஐயப்படுதல்.

"ஒண்ணுதல் நீவுவர் காதலர் மற்றவர்
கண்ணுவ தெவன்கொலோ அறியேன் என்னும்"

(கலித். 4)
எனவரும்.

அவன்றம ருவத்தல் என்பது - தலைவன் தமரைக் கண்ட வழி உவத்தல்.

" செய்வன சிறப்பிற் சிறப்புச்செய் திவ்விரா2
எம்மொடு சேர்ந்துசென் றீவாயாய் செம்மால்
நலம்புதி துண்டுள்ளா நாணிலி செய்த
புலம்பெலாந் தீர்க்குவேம் மன். "

(கலித். 83)
எனவரும்.

அறனழித் துரைத்தல் என்பது - அறத்தினை யழித்துக் கூறுதல்.

"விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார்3
அளியின்மை யாற்ற நினைந்து. "

(குறள். 1209)
எனவரும்.

ஆங்கு நெஞ்சழிதல் என்பது - அறனழிந்துரைக்கு மிடத்து நெஞ்சழிந்து கூறுதல்.

"பெறாஅமை அஞ்சும் பெறிற்பிரி வஞ்சும்
அறாஅ விடும்பைத்தென் நெஞ்சு."

(குறள்.1295)
எனவரும்.

எம்மெய் யாயினும் ஒப்புமை கோடல் என்பது - யாதானு மோர் உடம்பாயினுந் தன்னோடு ஒப்புமை கோடல் என்றவாறு.

"புன்கண்ணை வாழி மருள்மாலை எங்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை"

(குறள். 1222)
எனவரும். அளியின்மை யறினின்மை கூறினாளுமாம்.

ஒப்புவழி யுவத்தல் என்பது - தலைமகனோடு ஒக்குமெனப் பிறிதொன்று கண்டவழி யுவத்தல்.

"யாவருங் காணுநர் இன்மையிற் செத்தனள் பேணி."

எனவரும்.

உறுபெயர் கேட்டல் என்பது - தலைவன் பெயர்கேட்டு மகிழ்தல்.

"நசைஇயார் நல்கார் எனினும் அவர்மாட்
டிசையும் இனிய செவிக்கு."

(குறள். 1199)
எனவரும்.

கலக்கம் என்பது - மனங்கலங்குதல். மேற் ' கலங்கி மொழிதல் ' என்பது ஒருகாற் சொல்லின்கண் வந்து பெயர்வது. இது மனங்கலங்கி நிற்கும் நிலை.

"பொங்கிரு முந்நீர் அகமெல்லாம்4 நோக்கினை
திங்களுள் தோன்றி யிருந்த குறுமுயால்
எங்கேள் இதனகத் துள்வழிக் காட்டீமோ
காட்டீயா யாயிற் கதநாய் கொளுவுவேன்
வேட்டுவ ருள்வழிச் செப்புவே னாட்டி
மதியொடு பாம்பு மடுப்பேன் மதிதிரிந்த
என்னல்லல் தீரா யெனின்.

(கலித். 144)

"கோடுவாய் கூடாப் பிறையைப் பிறிதொன்று
நாடுவேன் கண்டெனன் சிற்றிலுட் கண்டாங்கே
ஆடையான்5மூஉ யகப்படுப்பேன்6 சூடிய
காணான் திரிதருங் கொல்லோ மணிமிடற்று
மாண்மலர்க்7 கொன்றை யவன். "

(கலித். 142)
எனவரும்.

இச் சூத்திரத்துள் 'நலத்தக நாடி ' எனக் கலக்கத்தைப் பிரித்து வைத்தமையாற் சொல்லப்பட்ட பத்தொன்பதினும் முதிர்ந்துவந்த நிலை என்று கொள்ளப்படும். இச் சூத்திரம் பொதுப்படக் கூறினமையாற் றலைமகற்கு ஏற்ப வருவன கொள்க8

(22)


1. அது.
2.(பாடம்) செல்வஞ் சிறப்பிற் சிறப்புச்செய் தீவாரால்.
3. பெற்றல்லம் என்பார்.
4.(பாடம்) கலமெல்லாம்.
5. மூடி
6. சூடி
7. மாலை
8. இவையெல்லாம் அறனும் பொருளும் அன்றி இன்பப்பொருள் நிகழ்ந்தவிடத்து அவரவர் உள்ளத்து நிகழ்வனவாதல் வழக்குநோக்கி உணரப்படுமென்பது. மேற்கூறிய நகை முதலாயவற்றுக்கும் இஃது ஒக்கும். இவ்வெண்ணப்பட்டன எல்லாம் உள்ளத்து நிகழ்ந்தனவற்றை வெளிப்படுப்பனவாகன் மெய்ப்பாடெனப்பட்டன. (தொல். பொருள். 270. பேரா.)