என் - னின் மேற் கூறப்பட்டன வெல்லாம் மனனழிவு நிகழ்ந்தவழி நிகழ்வனவாதலின். இவை மனன் அழியாதவழி நிகழ்வன என உணர்த்துதல் நுதலிற்று. முட்டுவயிற் கழறல் என்பது - களவு இடையீடுபட்டுழியதற்கு வருந்தாது இவ்வாறாகி நின்றதென அவனைக் கழறியுரைத்தல் என்றவாறு. முனிவு மெய்ந்நிறுத்தல் என்பது - வெறுப்பினைப் பிறர்க்குப் புலனாகாமல் மெய்யின் கண்ணே நிறுத்தல். அச்சத்தி னகறல் என்பது - இவ்வொழுக்கம் பிறர்க்குப் புலனாம் எனக் கூட்டத்தின் அகன்றொழுகல். அவன்புணர்வு மறுத்தல் என்பது - இது தலைமகன் புணர்ச்சிக்கண் வாராக்காலத்துத்தானும் மனனழியாது நிற்கும் நிலை. தூதுமுனி வின்மை என்பது - தூதுவிட்ட வழி வெறாமை. துஞ்சிச் சேர்தல் என்பது - கவற்சியான் உறங்காமையன்றி யுரிமைபூண்டமையான் உறக்கம் நிகழ்தல். காதல் கைம்மிகல் என்பது - அவ்வழியும் அன்பின்மையின்றிக் காதல் கைமிக்கு வருதல். கட்டுரை யின்மை என்பது - கூற்று நிகழ்த்துதலன்றியுள்ளக் கருத்தினை மறைத்தமர்ந்திருத்தல். இவை நடுவணைந்திணைக் குரிய. இவற்றிற்குச் செய்யுள் களவியலுட் காட்டப்பட்டது. வரைந்தோதாமையான். (28) 1. என்று ஆயிரு நான்கே அழிவில் கூட்டம் - என்றெண்ணப்பட்ட மெய்ப்பா டெட்டும் பின் அழியாத கூட்டத்திற்கு ஏதுவாம் என்றவாறு. அஃதாவது வரைந்தெய்துங் கூட்டம் என உணர்க. (தொல். பொருள்.271.பேரா.)
|