என்-னின் இஃது அழிவில் கூட்டத்திற்குரிய பொருள் உணர்த்துதல் நுதலிற்று. தெய்வ மஞ்சல் என்பது - தெய்வத்தினை யஞ்சுதல். " மன்ற மராத்த பேமுதிர்5 கடவுள் கொடியோர்த் தெறூஉம் என்ப." (குறுந்.87) எனவும்."நீயுறும்6 பொய்ச்சூள் அணங்காகின்7 மற்றினி யார்மேல் விளியுமோ கூறு." (கலித். 88) எனவும் வரும்.புரையறந் தெளிதல் என்பது - 'கடன்மிக்கனவே' என்ற வழிப் பரத்தைமை கண்டு புலவாது 'இதனைப்போற்றல்' இல்லுறைமகளிர்க் கியல்பென்னும் அறத்தினானே எனக்கூறியவாறு கண்டுகொள்க. இல்லது காய்தல் என்பது - தலைமகன்கணில்லாத குறிப்பினை யவன்மாட்டு உளதாகக் கொண்டு காய்தல். "யாரினும் காதலம் என்றேனா ஊடினாள் யாரினும் யாரினும் என்று." (குறள். 1314) இதனுள் சொன்னமாற்றத்தை வேறாகப் பொருள்கொண்டு இல்லாததனைச் சொல்லிக் காய்ந்தவாறு காண்க. உள்ளதுவர்த்தல் என்பது - உள்ளதனை யுவர்த்துக் கூறுதல். அது தலைவன் செய்கின்ற தலையளியை வெறுத்தல். 'வெய்யாரும் வீழ்வாரும் வேறாகக் கையின் முகையலர்ந் தன்ன முயக்கின் தொகையின்றே தண் பனி வைகல் எமக்கு." (கலித்.78) எனவரும்.புணர்ந்துழி யுண்மை என்பது - புணர்ந்தவழி யூடலுள் வழி மறைத்துக்கூறாது அவ்வழி மனநிகழ்ச்சியுண்மை கூறுதல். "'குளிரும் பருவத்தே ஆயினுந்8 தென்றல் வளியெறியின் மெய்யிற் கினிதாம் - ஒளியிழாய் ஊடி யிருப்பினும் ஊரனறுமேனி கூடல் இனிதா மெமக்கு ." (ஐந்திணையைம் . 30) எனவரும் .பொழுதுமறுப்பாதல் என்பது - தலைவன் வரும்பொழுது நியமமின்றி மறுப்பு வந்துழிப் பொழுதினைப் பற்றி நிகழும் மனநிகழ்ச்சி . " புல்லிய கேளிர் புணரும் பொழுதறியேன் அல்லியா கெல்லையென் றாங்கே பகல்முனிவேன் எல்லிய காலை யிராமுனிவேன் யானுற்ற அல்லல் களைவார் இலேன் ." (கலித் . 144) எனவரும் .இது பெருந்திணைக்கு உரியதன்றோ எனின் , ஆண்டு , ' மரபுநிலைதிரியா மாட்சிய வாகி விரவும் பொருளும் ' ( அகத்திணை . 48 ) விரிந்ததெனக் கொள்க . அருண்மிக வுடைமையாவது - தலைமகன்மாட்டு அருள் புலப்பட நிற்கும் நிலை . 'முதைச்சுவற்கலித்த என்னும் அகப்பாட்டினுள் . " நடுங்குதுயர் களைந்த நன்ன ராளன் சென்றனன் கொல்லோதானே ................ வடுவாழ் புற்றின வழக்கறு நெறியே . " (அகம் . 86) எனவரும்,அவன் போனபின்பு இடையூறின்றிப் பெயர்ந்தான் கொல்லென அருள் மிகுத்தவாறு காண்க . அன்புமிக நிற்றல் என்பது - அன்பு புலப்பட நிற்றல் . " கொடிய னாயினும் ஆக அவனே தோழி என்னுயிர்க்கா வலனே . ' (சிற்றெட்டகம் .) என்றவழி , அன்புதோன்ற நின்றவாறு காண்க . பிரிவாற்றாமை என்பது - பிரிவின்கண் ஆற்றாமை . " செல்லாமை யுண்டேல் எனக்குரை மற்றுநின் வல்வரவு வாழ்வார்க்குரை . " (குறள் . 1151) எனவரும் .மறைந்தவை யுரைத்த புறஞ்சொன் மாணாக் கிளவியொடு தொகைஇ என்பது - மறைத்த ஒழுக்கத்தைக் கூறிய புறஞ் சொல்லாகிய அலர் மாட்சிமைப் படாத கிளவியொடுகூட என்றவாறு . மறைந்தவை யுரைத்த புறஞ் சொல்லாவது - அலர் . மாணாமை யாவது - அவ்வலர் மாட்சிமைப்படாமற் கற்புக்கடம் பூண்டல் . அன்றியும் . " மாண மறந்துள்ளா நாணிலி . " (கலித் . 89 ) என்றாற் போல மாணாமை என்பது மிகாமை என வுரைப்பினும் அமையும் . அலர் மிகாமைக் கூறுங் கூற்றினும் கற்புக்கடம் பூண்டு கூறுதல் ." நடுநாள் வரூஉம் இயல்தேர்க் கொண்கனொடு செலவயர்ந் திசினால் யானே அலர்சுமந் தொழிகவிவ் அழுங்க லூரே . " ( நற்றிணை . 149 ) எனவரும் .அலர்மிகாக் கிளவி யாவது - அதற்கு உள்ளம் நாணுதல் . " களிறுகவர் கம்பலை போல அலரா கின்றது பலர்வாய்ப் பட்டே . " ( அகம் . 66 ) எனவரும் .சிறந்த பத்துஞ் செப்பிய பொருளே என்பது - இச்சொல்லப்பட்ட பத்தும் மேற்சொல்லப் பட்ட அழிவில் கூட்டப் பொருள் என்றவாறு , என்றவழி நடுவணைந்திணைக்குரிய பொருள் என்றவாறு . (24)
1. தெய்வம் அஞ்சல் என்பது தலைமகற்குத் தொழுகுலமாகிய தெய்வமும் அவற்கு ஆசிரியராகிய தாபதரும் இன்னோரென்பது அவனான் உணர்த்தப்பட்டு உணர்ந்த தலைமகள் அத்தெய்வத்தினை அஞ்சி ஒழுகும் ஒழுக்கம் அவள்கட்டோன்றும்; அங்ஙனம் பிறந்த உள்ள நிகழ்ச்சியைத் தெய்வம் அஞ்சல் என்றான் என்பது. மற்றுத்தனக்குத் தெய்வம் தன் கணவனாதலான் அத்தெய்வத்தினைத் தலைமகள் அஞ்சுதல் ஏற்றுக்கெனின், அவனின்தான் வேறல்லளாக மந்திர விதியிற்கூட்டினமையின் அவனான் அஞ்சப்படும் தெய்வம் தனக்கும் அஞ்சப்படும் என்பது. அல்லதூஉம் தலைவற்கு ஏதம் வருமெனவும் அஞ்சுவள் என்பது. (தொல்.பொருள். பேரா.) 2. (பாடம்)பொழுது மறுப்பாக்கம். 3. அன்புதொக. 4. புறஞ்சொல் மாணாக்கிளவி என்பது தலைமகற்கு வந்த புறஞ்சொல்லின் பொல்லாங்கு குறித்து எழுந்தகிளவி. அவற்கு வரும் பழிகாத்தலும் தனக்கு அறமாதலின் அதுவும் கற்பின்கண்ணே நிகழும் என்பது. (தொல். பொருள். 272. பேரா.) 5. (பாடம்)மராஅத்த பேஎமுதிர். 6. நீகூறும். 7. அணங்காகி 8. தளிரும் பருவத்தே தம்மானும் .
|