உவமையியல்

இவ்வோத்து என்ன பெயர்த்தோ எனின். உவமையியல் என்னும் பெயர்த்து. ஒருபடை ஒப்புமைபற்றி யுவமை உனர்த்தினமையாற் பெற்ற பெயர். மெய்ப்பாடு பற்றித் தோன்றி வழங்குவது.

இதனாற் பயன் என்னைமதிப்பதோவெனின், புலன் அல்லாதன புலனாதலும் அலங்காரமாகிக் கேட்டார்க்கின்பம் பயத்தலும், ஆப்போலும் ஆமா என வுணர்த்திய வழி,அதனைக் காட்டகத்துக் கண்டான் முன் கேட்ட ஒப்புமைப்பற்றி இஃது ஆமாவென்ற அறியும், "தாமரை போல் வாள்முகத்துத் தையலீர்" என்றவழி அலங்காரமாகிக் கேட்டார்க்கு துன்பம் பயக்கும். அஃதாவது மேற்சொல்லப்பட்ட எழுதிணையினும் யாதனுள் அடங்கும் எனின், அவையெல்லாவற்றிற்கும் பொதுவாகிப் பெரும்பான்மையும் அகப்பொருள் பற்றிவரும்.

மேற் குறிப்புப்பற்றி வரும் மெய்ப்பாடு கூறினார்: இது பண்புந் தொழிலும்பற்றி வருதலின் அதன்பின் கூறப்பட்டது.

.

2722வினைபயன் மெய்உரு என்ற நான்கே
வகைபெற வந்த உவமைத்3 தோற்றம்.

என்பது சூத்திரம்.

இதன் தலைச்சூத்திரம் என்னுதலிற்றோ வெனின், உவமத்தினை யொருவாற்றாற் பாகுபாடு உணர்த்துதல் நுதலிற்று.

வினைபயன் மெய்யுரு என்ற நான்கே வகைபெற வந்த உவமைத்தோற்றம் என்பது - தொழிலும் பயனும் வடிவும் நிறனும் என்று சொல்லப்பட்ட நான்குமே அப்பாகுபட வந்த உவமைக்கண் புலனாம் என்றவாறு.

எனவே கட்புலமல்லாதனவு முள என்றவாறாம். அவை செவியினானும் நாவினானும் மூக்கினானும்-மெய்யினானும் மனத்தினானும் அறியப்படுவன. இவ்விருவகையும் பாகுபடவந்த உவமையாம்.

அவற்றுள், கட்புலனாகியவற்றுள் வினையாவது நீட்டல் முடக்கல், விரித்தல் குவித்தல் முதலியன. பயனாவது நன்மையாகவும் தீமையாகவும் பயப்பன. வடிவாவது வட்டம் சதுரம் கோணம் முதலாயின. நிறமாவன வெண்மை பொன்மை முதலாயின. இனிச் செவிப்புலனாவது ஓசை, நாவினான் அறியப்படுவது கைப்பு காழ்ப்பு முதலிய சுவை. மெய்யினான் அறியப்படுவன வெம்மை தண்மை முதலாயின. மூக்கால் அறியப்படுவன நன்னாற்றம் தீநாற்றம். மனத்தால் அறியப்படுவன இன்பதுன்ப முதலியன.


உதாரணம்

"புலிபோலப் பாய்ந்தான்" என்பது வினை.

"மாரி யன்ன வண்கை" என்பது பயன்.

(புறம்.133)

"துடி போலும் இடை" என்பது வடிவு.

"தளிர் போலும் மேனி" என்பது நிறம்.

"குயில்போன்ற மொழி" செவியாலறியப்பட்டது.

"வேம்புபோலக் கைக்கும்" நாவினாலறியப்பட்டது.

"தீப்போலச் சுடும்" மெய்யினாலறியப்பட்டது.

"ஆம்பல் நாறுந் துவர்வாய்" மூக்காலறியப்பட்டது.

(குறுந்.300)
'

'தம்மி லிருந்து தமதுபாத் துண்டற்றால்

அம்மா அரிவை முயக்கு."

(குறள்.1107)

மனத்தானறியப்பட்டது.

பிறவு மன்ன,


1. 'உவமவியல்' என்பது பேராசிரியர் கொண்ட பாடம்.

2. வினையாற்பயப்பது பயனாதலின் பயத்திற்குமுன் வினை கூறப்பட்டது; அதுபோலப் பிழம்பினால் தோன்றும் நிறத்தினை அதற்குப்பின் வைத்தான். பயனும் பொருளாக நோக்கி மெய்யினையும் அதனுடன் வைத்தான் என்பது மற்று. மெய்யெனப்படுவது பொருளாதலின், அதன் புடைபெயர்ச்சியாகிய வினை பிற்கூறுக எனின், வினையுவமம் தன்னுருபு தொக்கு நில்லாது விரிந்தே நிற்றற் சிறப்புடையனவும் உளவாக நோக்கி அதுமுற் கூறினான் என்பது.....(தொல்.பொருள்.276.பேரா)

3. (பாடம்) உவமத்.