உவமையியல்

274உயர்ந்ததன் மேற்றே உள்ளுங் காலை1

என்-னின் மேலதற்கோர் சிறப்புவிதி யுணர்த்துதல் நுதலிற்று .

மேற்சொல்லப்பட்ட உவமை ஆராயுங்காலத்து உயர்ந்ததன் மேலன என்றவாறு.

ஈண்டு உயர்ச்சியாவது - வினைமுதலாகச் சொல்லப்பட்டன உயர்தல்.

" அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின் "

(பட்டினப். 298)

என்றவழி துப்புடைய பலவற்றினும் அரிமா உயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது.

"தாமரை புரையுங் காமர் சேவடி"

(குறுந் கடவுள் வாழ்த்து )

என்றவழி சிவப்புடைய பலவற்றினும் தாமரை யுயர்ந்ததாகலின் அதனை உவமையாகக் கூறப்பட்டது அஃதேல் ,

"கொங்கியர் ஈன்ற மைந்தரின்
மைந்துடை உழுவை திரிதருங் காடே."


எனஇழிந்ததன்மேல் உவமை வந்ததால் எனின் , ஆண்டுக் கொங்கியரீன்ற மைந்தரின் என விசேடித்த தன்மையான் அவர் பிறநிலத்து மக்களொடு ஒரு நிகரரன்மையின் அவரும் உயர்ந்தோராகக் கொள்க .

" சாறுதலைக் கொண்டெனப் பெண்ணீற் றுற்றெனப்
பட்ட மாரி ஞான்ற ஞாயிற்றுக்
கட்டி னிணக்கும் இழிசினன் கையது
போழ்தூண் டூசியின்2 விரைந்தன்று மாதோ
ஊர்கொள3 வந்த பொருநனோ
டார்புனை தெரியல் நெடுந்தகை போரே."

(புறம்.82)

என்பது இழிந்ததன்மேல் வந்ததாயின் ஆணியூசியினது விரைவு மற்றுள்ள விரைவின் உயர்ந்ததாகலின் அதுவும் உயர்ந்ததாம்.

1. ' உள்ளுங்காலை ' என்றதனான் முன்னத்தின் உணருங்கிளவியான் உவமங்கோடலும் , இழிந்த பொருள் உவமிப்பினும் உயர்ந்த குறிப்புப் படச்செயல் வேண்டும் எனவும் கொள்க . அவை ' என் யானை ' , ' என்பாவை ' என்றவழி , அவைபோலும் என்னும் குறிப்புடையான் பொருள் கூறிற்றிலனாயினும் , அவன் குறிப்பினான் அவை வினைஉவமை எனவும் மெய்உவமைம எனவும் படும் (தொல் , பொருள் . 278 . பேரா.)

2.(பாடம் ) போழ்துன்றூசியின்.

3.ஊர்தர .