என்-னின், இதுவுமது. மேற்சொல்லப்பட்ட உவமை தம்மின் உயர்ந்தவற்றோடு உவமிக்கப்பட்டனவேனும், சிறப்பாதல் நலனாதல் காதலாதல் வலியாதல் நிலைக்களனாக வரும் என்றவாறு. இவையிற்றைப்பற்றித் தோன்று மென்பது கருத்து. "முரசுமுழங்கு தானை மூவரும் கூடி அரசவை இருந்த தோற்றம் போலப் பாடல் பற்றிய பயனுடை எழாஅல்" (பொருநராற்.54-6) எனச் சிறப்புப் பற்றி வந்தது."ஓவத் தன்ன வியனுடை வரைப்பின்" (புறம்.251) என்பது நலம்பற்றி வந்தது."கண்போல்வான் ஒருவ னுளன்" என்பது காதல்பற்றி வந்தது."அரிமான் அன்ன அணங்குடைத் துப்பின்" (பட்டினப்.218) என்பது வலிபற்றி வந்தது. பிறவு மிவ்வாறே படுத்துநோக்கிக் கண்டுகொள்க. (4)
1.சிறப் பென்பது , உலகத்துள் இயல்புவகையானன்றி விகாரவகையாற் பெறும் சிறப்பு . காதல் என்பது அந்நலனும் ( அழகும் ) வலியும் இல்வழியும் உண்டாக்கி உரைப்பது . இவற்றை நிலைக்களம் எனவே இவைபற்றாது உவமம் பிறவாதென்பதாம் . உயர்ந்த பொருளின் இழிந்த தெனப்பட்ட பொருள் யாதானும் இயைபில்லதொன்று கூறலாகாதனவும் , உவமையொடு முழுதும் ஒவ்வாமை மாத்திரையாகி அதனோடொக்கும் பொருண்மை உவமிக்கப்படும் பொருட்கண்ணும் உளவாகல் வேண்டும் எனவும் கூறி அவைதாமும் பிறர் கொடுப்பப் பெறுவனவும் , ஒரு பொருட்கண் தோன்றிய நன்மை பற்றியவும் , காதல் மிகுதியால் உளவாகக்கொண்டு உரைப்பனவும் , தன் தன்மையால் உளவாயின வலிபற்றினவும் என நான்காம் என்றவாறு . இவற்றுக்கெல்லாம் வினை பயன் மெய் உரு என்னும் நான்கும் தலைப்பெய்யும் என்பது .(தொல் . பொருள் . 279 . பேரா )
|