உவமையியல்

281பெருமையுஞ் சிறுமையுஞ் சிறப்பின் தீராக்
குறிப்பின் வரூஉ நெறிப்பா டுடைய.

என் - னின் . இதுவும் உவமைக்குரியதோர் மரபுணர்த்துதல் நுதலிற்று.

உவமையும் பொருளும் ஒத்தன கூறலே யன்றிப் பெருகக் கூறலுஞ் சிறுகக்கூறுலும் மேற்சொல்லப்பட்ட சிறப்பென்னும் நிலைக்களத்து நீங்காச் சிறப்பின்வரூஉம் வழக்கப்பாட்டினையுடைய என்றவாறு.

எனவே வழக்கின்கட் பயின்று வாராத இறப்பவுயர்தலும் இறப்ப விழிதலும் ஆகா வென்றவாறு.

"அவாப்போ லகன்றதன் அல்குன்மேற் சான்றோர்
உசாஅப்போல வுண்டே மருங்குல்"


என்றவழி அல்குல் பெரிதென்பான் ஆசையோடுவமித்தலின் இது தக்கதாயிற்று! மருங்குல் நுண்ணிதென்பான் சான்றோ ருசாவொடு உவமித்தலின் அதுவும் தக்கதாயிற்று. அவை சிறப்புப் பற்றி வந்தன.

இனி நெறிப்பாடின்றி வருவன இறப்ப உயர்தலும் இறப்ப இழிதலும் என இருவகைப்படும்.

"இந்திரனே போலு மிளஞ்சாத்தன் ..... நாறுமிணர்" (யாப்....வி....ஒழி)

இஃது இறப்பவுயர்ந்தது. வழக்கிறந்துவருதலின் இவ்வாறு வரும் உவமை கூறப்பட்டது.

"வள்ளெயிற்றுப் பேழ்வாய் ஞமலிக்கு மான்குழாம்
எள்ளி யிரிவதுபோ லெங்கெங்கும் வள்ளற்கு
மாலார் கடல்போல மண்பரந்த வாட்டானை
மேலாரு மேலார் விரைந்து"

(யாப்.வி.ஒழி)

இஃது இறப்ப இழிதலின் இதுவுமாகாது.

அஃதேல் "நாயனையார் கேண்மை தழீஇக் கொளல்வேண்டும்"(நாலடி.213) என வருமால் எனின், அது நாயின்கட் கிடந்ததோர் நற்குணம்பற்றி வருதலின் இறப்ப இழிதல் ஆகாது.