உவமையியல்

282அவைதாம்,
அன்ன ஏய்ப்ப உறழ ஒப்ப
என்ன மான என்றவை யெனாஅ
ஒன்ற ஒடுங்க ஒட்ட வாங்க
வென்ற வியப்ப வென்றவை யெனாஅ
எள்ள விழைய இறப்ப நிகர்ப்பக்
கள்ளக் யெனாஅப்
புல்லப் பொருவப் பொற்பப் போல
வெல்ல வீழ வாங்கவை யெனாஅ
நாட நளிய நடுங்க நந்த
ஓடப் புரைய என்றவை யெனாஅ
ஆறா றுவமையும்1 அன்னவை பிறவுங்2
கூறுங் காலைப் பல்குறிப் பினவே.

என் - னின். இஃது உவமையுணர்த்துஞ் சொற்களை வரையறுத்து உணர்த்துதல் நுதலிற்று.

மேற்சொல்லப்பட்ட உவமைகள் தாம் அன்ன என்பது முதலாகப் புரைய என்பதீறாக வந்தனவும் அன்னவை பிறவுமாகிச் சொல்லுங்காலத்துப் பல குறிப்பினையுடைய என்றவாறு.

சொல்லுங்காலத்து என்றமையிற் சொல்லென்பது கொள்க.

அன்னபிறவாற் கொள்ளப்படுவன: நோக்க,நேர,அனை,அற்று,இன்,ஏந்து, ஏர் சீர், கெழு, செத்து, ஏர்ப்ப, ஆர என்றித் தொடக்கத்தன கொள்க.

'பல்குறிப்பின' என்றதனான் இச்சொற்கள் பெயரெச்சநீர்மையவாய் வருவனவும் வினையெச்ச நீர்மையவாய் வருவனவும் முற்று நீர்மையவாய் வருவனவும் இடைச்சொல் நீர்மையவாய் வருவனவும் எனக் கொள்க. 'புலிபோன்ற சாத்தன்' 'புலிபோலுஞ் சாத்தன்' என்பன பெயரெச்சம். 'புலிபோன்று வந்தான்' புலிபோலப் பாய்ந்தான்' என்பன வினையெச்சம். 'புலிபோலும்' ' புலிபோன்றனன் ' என்பன முற்று. அன்ன, இன்ன இடைச்சொல்.

இன்னும் பல்குறிப்பின என்றதனான் விரிந்தும் தொக்கும் வருவனவுங் கொள்க. தேன்போல இனியமொழி இது விரிந்தது. 'தேன் போலும் மொழி' இது உவமை விரிந்து ஒப்புமை குறித்துத் தொக்குநின்றது. 'தேமொழி என்பது எல்லாந்தொக்கது. பிறவு மன்ன.

ஈண்டு எடுத்தோதப்பட்ட முப்பத்தாறினும் ஒன்ற, என்ற, மாற்ற, பொற்ப, நாட நடுங்க என்பனவொழித்து நின்றமுப்பதும் அன்னபிறவாற் கொள்ளப்பட்டவற்றுள் நோக்க என்பதும் நேர என்பதுஞ் சிறப்புவிதி யுடைத்தாதலின் அதற்கு உதாரணம் ஆண்டுக் காட்டுதும், ஏனைய ஈண்டுக் காட்டுதும்.

"வேலொன்று கண்'

'கயலென்ற கண்'

'மணிநிற மாற்றிய மாமேனி'

'மதியம் பொற்ப மலர்ந்த வாண்முகம்'

"வேயொடு நாடிய தோள்'

படங்கெழுநாகம் நடுங்கு மங்குல்'

'குன்றினனையாருங் குன்றுவர்

(குறள். 965)


'இறந்தாரை யெண்ணிக்கொண்டற்று

(குறள். 22)


'மருப்பிற் றிரிந்து மறிந்து வீழ் நாடி

(கலித். 15)


'துணைமலரெழினீலத் தேந்தெழின்மலருண்கண்

(கலித். 14)


'முத்தேர் முறுவலாய்

(கலித். 93)



'எச்சிற் கிமையாது பார்த்திருக்கு மச்சீர்

(நாலடி.3450)



'யாழ்கெழு மணிமிடற் றந்தணன்

(அகம் கடவுள் வாழ்த்து)



'கிளை செத்து மொய்த்த தும்பி

(நற். 35)

எனவரும் பிறவுமன்ன.

1. (பாடம்) ஆறாறவையும்

2. 'பிறவும்' என்பதனான் எடுத்தோதினவேயன்றி,நேரநோக்க துணைப்ப மலைய ஆர அமர அனைய ஏர ஏர்ப்ப செத்து அற்று கெழு என்ற தொடக்கத்தனபலவும் ஐந்தாம் வேற்றுமைப் பொருள்பற்றி வருவனவும் எனவென் எச்சங்கள் பற்றி வருவனவும் பிறவும் எல்லாம் கொள்க.(தொல், பொருள், 286, பேரா.)