உவமையியல்

306ஒரீஇக்1 கூறலும் மரீஇய பண்பே.

என் - னின். இதுவு முவமைக் குரியதோர் மரபு உணர்த்துதல் நுதலிற்று.

உவமையை உவமிக்கப்படும் பொருளின் நீக்கிக் கூறலும் மருவிய இயல்பு என்றவாறு.

"கடந்தடு தானைச் சேரலாதனை
யாங்ஙனம் ஒத்தியோ வீங்குசெலல்மண்டிலம்
பொழுதென வரைதி புறக்கொடுத் திறத்தி
மாறி வருதி மலைமறைந் தொளித்தி
அகலிரு விசும்பி னானும்
பகல்விளங் குதியாற் பல்கதிர் விரித்தே,"

(புறம். 8)

எனவரும்.

" அனிச்சமும் அன்னத்தின் தூவியும் மாதர்
அடிக்கு நெருஞ்சிப் பழம்."

(குறள். 1120)

என்பது மது.

(35)


1.இவற்றுள், யாங்ஙனம் ஒத்தியோ என்பது ஒவ்வாய் என்னும் பொருட்டு, அஃதாவது ஒரீஇக்கூறியது. (தொல், பொருள், 308. பேரா.)