என் - னின் இதுவுமது. உவமிக்கப்படும் பொருளோடு உவமைதோன்ற வருதலேயன்றி யுவமையது தன்மை கூறலு முவமையாதற்குரித்து; பயனிலை பொருந்திய வழக்கின்கண் என்றவாறு. எனவே இவ்வாறுவருவது பயனிலை யுவமைக்கண் என்று கொள்க. பாரி பாரி யென்றுபலஏத்தி ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர் பாரி யொருவனும் அல்லன் மாரியு முண்டீண் டுலகுபுரப் பதுவே. (புறம்.107) இதுமாரி போலும் பாரியது கொடை என்னாது இவ்வாறுகூறும் பொருண்மையும் உவமமாம் என்றவாறு. (36)
1.இப்பாட்டினுள் உலகளித்தற்கு மாரியும் உண்டென மாரியை உவமித்துச் சிறப்பித்துக்கூறுவான், மாரியைச் சிறப்பித்துப் பாட்டுடைத் தலைவனாகிய பாரியை உயர்த்துக்கூறாதான் போல இயல்பினான் உவமை கூறினானாம். இது மாரிக்கும் பாரிக்கும் ஒர் இழிவு இல்லை என்னும் தன்மை படக்கூறவே அவன் உயர்வு கூறுதலின் 'பயனிலைபுரிந்த வழக்கெனப்படும் ' என்பது. ( தொல். பொருள். 306. பேரா.)
|