செய்யுளியல்

312 குறிலே நெடிலே குறிலிணை குறில்நெடில்
ஒற்றொடு வருதலொடு மெய்ப்பட நாடி
நேரும் நிரையு மென்றிசிற் பெயரே.

என்பது நிறுத்தமுறையானே அசையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

குறிலும் நெடிலுங் குறிலிணையுங் குறினெடிலுங் தனியேவரினும் ஒற்றொடுவரினும், ஆராயுங்காலத்து நேரசையும் நிரையசையுமா மென்றவாறு.

இதுவு மொருநிரனிறை; முந்துற்ற நான்கு மொருபொருளாய்ப் பின்னிரண்டாகிவரினும், முற்பட்டவையும் இரண்டாகப் பகுத்தலான். கோழி வேந் தன், என நான்குநேரசையும், வெறி சுறா நிறம் குரால், என நான்கு நிரையசையும்.

(3)