இது, நிறுத்தமுறையான் நிலத்தால் திணையாமாறு உணர்த்துதல் நுதலிற்று. மாயோன் மேய காடு உறை உலகமும் - (இ-ள்) மாயவன் மேவிய காடுபொருந்திய உலகமும், சேயோன் மேய மைவரை உலகமும் - முருகவேள் மேவிய மைவரை உலகமும், வேந்தன் மேயதீம்புனல் உலகமும் - இந்திரன் மேவிய தீம்புனல் உலகமும், வருணன் மேய பெருமணல் உலகமும் - வருணன் மேவிய பெருமணல் உலகமும், முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என சொல்லிய முறையால் சொல்லவும் படும்- முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் எனச் சொல்லிய முறையினானே சொல்லவும் படும். நிரனிறை. உம்மை எதிர்மறையாகலான் இம் முறையன்றிப் பிற வாய்பாட்டாற் சொல்லவும்படும் என்றவாறு காடு நாடு மலை கடல் என்பதே பெருவழக்கு. இன்னும் "சொல்லியமுறையால் சொல்லவும் படும்". என்றதானான், இம் முறையன்றிச் சொல்லவும் படும் என்று கொள்க. அஃதாவது, அவற்றுள் யாதானும் ஒன்றை முன்னும் பின்னுமாக வைத்துக் கூறுதல். அது சான்றோர் செய்யுட் கோவையினும் பிறநூலகத்துங் கண்டுகொள்க. இச் சூத்திரத்துள் காடுறை நிலம் என்னாது உலகம் என்றதனான் ஐவகைப் பூதத்தானும் ஐந்து இடம் என்பது உய்த்துணர வைத்தவாறு கண்டு கொள்க1. முல்லை குறிஞ்சி என்பன இடுகுறியோ, காரணக்குறியோ எனின், ஏகதேச காரணம்பற்றி முதலாசிரியர் இட்டதோர் குறி என்று கொள்ளப்படும். என்னை காரணம் எனின். "நெல்லொடு, நாழி கொண்ட நறுவீ முல்லை அரும்பவிழ் அலரி தூஉய்" (முல்லைப்பாட்டு: 8-10) என்றமையால், காடுறை உலகிற்கு முல்லைப்பூ சிறந்தது ஆகலானும், "கருங்கோற் குறிஞ்சிப் பூக்கொண்டு பெருந்தேன் இழைக்கும் நாடனொடு நட்பே" (குறுந்.3) என்றவழி மைவரை உலகிற்குக் குறிஞ்சிப்பூச் சிறந்தது ஆகலானும், "இறா அல்2 அருந்திய சிறுசிரல் மருதின் தாழ்சினை உறங்குந் தண்துறை ஊர" (அகநா. 286) என்றவழி, தீம்புனல் உலகிற்கு மருது சிறந்தமையானும், "பாசடை நிவந்த கணைக்கால் நெய்தல் இனமீன் இருங்கழி ஓதம் மல்குதொறும் கயமூழ்கு மகளிர் கண்ணின் மானும்" (குறுந்.1) என்றவழிப் பெருமணல் உலகிற்கு நெய்தல் சிறந்தமையானும் இந்நிலங்களை இவ்வாறு குறியிட்டார் என்று கொள்ளப்படும். பாலை என்பதற்கு நிலம் இன்றேனும், வேனிற்காலம் பற்றி வருதலின் அக் காலத்துத் தளிரும் சினையும் வாடுதலின்றி நிற்பது பாலை என்பதோர் மரம் உண்டாகலின், அச் சிறப்பு நோக்கிப் பாலை என்று குறியிட்டார். கைக்கிளை பெருந்திணை என்பனவற்றிற்கு நிலமும் காலமும், பகுத்து ஓதாமையின் இவ்வாறன்றிப் பிறிதோர் காரணத்தினாற் குறியிட்டார். [ஏகாரம் ஈற்றசை.] (5)
1."முல்லை குறிஞ்சி மருதம் நெய்தல் என்ற முறை யென்னையெனின், இவ்வொழுக்க மெல்லாம் இல்லறம் பற்றிய ஒழுக்கமாதலின் கற்பொடு பொருந்திக் கணவன் சொற்பிழையாது இல்லிருந்து நல்லறஞ்செய்தல் மகளிரது இயற்கை முல்லையாதலின், அது முற்கூறப்பட்டது. எனவே, முல்லையென்ற சொற்குப் பொருள் இருத்தலாயிற்று. " முல்லை சான்ற முல்லையம் புறவின்" என்பவாதலின், புணர்தலின்றி இல்லறம் நிகழாமையிற் புணர்தற்பொருட்டு ஆகிய குறிஞ்சியை அதன்பின் வைத்தார். இதற்கு உதாரணம் இறந்தது. "கருங்காற் குறிஞ்சி சான்ற வெற் பணிந்து" என்பது கரு. புணர்ச்சிப் பின் ஊடல் நிகழ்தலின் அதன்பின் மருதத்தை வைத்தார். "மருதஞ் சான்ற மருதத் தண்பணை" என்புழி மருதம் என்றது ஊடியுங் கூடியும் போகநுகர்தலை. பரத்தையிற்பிரிவுபோலப் பிரிவொப்புமை நோக்கி நெய்தலை ஈற்றின் கண் வைத்தார். நெய்தற் பறையாவது இரங்கற் பறையாதலின், நெய்தல் இரக்கமாம்." (தொல். அகத். 5. நச்சி - உரை.) 6,7,சூத்திரங்களை ஒரே சூத்திரமாக்குவர் நச்சினார்க்கினியர் வைகுறு விடியல் (நச்) கங்குல் வைகிய அறுதியாதல் நோக்கி வைகறை எனவும் கூறுப. (நச்) (பாடம்) 2. வராஅல். |