செய்யுளியல்

539இழுமென் மொழியால் விழுமியது நுவலினும்
பரந்த மொழியால் அடிநிமிர்ந் தொழுகினுந்
தோலென மொழிப தொன்னெறிப்1 புலவர்.

என் - னின் . நிறுத்தமுறையானே தோலாகிய செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று.

இழுமென் மொழியால் விழுமிய பொருளைக் கூறினும் பரந்த மொழியினால் அடி நிமிர்ந்து ஒழுகினும் தோல் என்னுஞ் செய்யுளாம் என்றவாறு.


உதாரணம்

"பாயிரும் பரப்பகம் புதையப் பாம்பின்
ஆயிர மணிவிளக் கழலுஞ் சேக்கைத்
துளிதரு வெள்ளந் துயில்புடை பெயர்க்கும்
ஒளியோன் காஞ்சி எளிதெனக் கூறின்
இம்மை யில்லை மறுமை யில்லை
நன்மை யில்லைத் தீமை யில்லைச்
செய்வோ ரில்லைச் செய்பொரு ளில்லை
அறிவோர் யாரஃதிறுவழி இறுகென."

(மார்க்கண்டேயனார் காஞ்சி)

என்றது இழுமென் மொழியால் விழுமியது நுவல வந்தது.

"திருமழை தலைஇய இருள்நிற விசும்பு."

(மலைபடுகடாம்-1)

என்னுங் கூத்தராற்றுப்படை பரந்தமொழியான் அடிநிமிர்ந்து வந்தது.
(226)

1.தொன்மொழிப்