செய்யுளியல்

540விருந்தே1 தானும்
புதுவது புனைந்த2 யாப்பின் மேற்றே.

என் - னின் நிறுத்தமுறையானே விருந்தென்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று.

விருந்தாவது முன்புள்ளார் சொன்ன நெறிபோய்ப் புதிதாகச் சொன்னயாப்பின் மேலது என்றவாறு.

புதிதாகப் புனைதலாவது ஒருவன் சொன்ன நிழல்வழியன்றித் தானே தோற்றுவித்தல் அது வந்தவழிக் காண்க.

இது பெரும்பான்மையும் ஆசிரியப்பாவைக் குறித்தது.

(227)

1.தானும் என்ற உம்மையான் முன்னைத் 'தோல்' எனப்பட்டதூஉம் பழைய கதையைப் புதியதாகச் சொல்லியதாயிற்று. இது பழங்கதை மேற்றன்றிப் புதிதாகச் சொல்லப்படுதல் ஒப்புமையின் உம்மையான் இறந்தது தழீஇயினான் என்பது. (தொல். பொருள். 551 .பேரா)

2.(பாடம்) கிளந்த.