செய்யுளியல்

541ஞகார1 முதலா னகார ஈற்றுப்
புள்ளி இறுதி இயை2 பெனப் படுமே.

என் - னின் . நிறுத்தமுறையானே இயைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

ஞணநமன யரலவழள என்னும் பதினொரு புள்ளியும் ஈறாகவருஞ் செய்யுள் இயைபென்னுஞ் செய்யுளாம் என்றவாறு.

உதாரணம் வந்தவழிக் காண்க.

(228)

1.ஞகாரை முதலா னகாரை யீற்று.

2.`இயைபு என்றதனானே பொருளும் இயைந்து சொல்லும் இயைந்து வரும் என்பது கருத்து. சீத்தலைச் சாத்தனாரால் செய்யப்பட்ட மணிமேகலையும் கொங்குவேளிரால் செய்யப்பட்ட தொடர்நிலைச் செய்யுளும் (பெருங்கதை) போல்வன.பரந்த மொழியான் அடிநிமிர்ந்தொழுகிய தோலோடு இதனிடை வேற்றுமை என்னையெனின் அவை உயிர் ஈற்றவாதல் பெரும்பான்மையாகலான் வேறுபாடுடைய சொற்றொடரான் வருதலும் உடைய என்பது . சொற்றொடர் என்பது அந்தாதி எனப்படுவது; என்றதனான் உயிரீற்றுச் சொற்றொடர் சிறுபான்மை என்பது கொள்க.(தொல். பொருள் . 552.பேரா)