செய்யுளியல்

542தெரிந்த1 மொழியாற் செவ்விதிற் கிளந்து
தேர்தல் வேண்டாது குறித்தது தோன்றிற்
புலனென மொழிப புலனுணர்ந் தோரே.

என் - னின் , நிறுத்தமுறையானே புலன் என்னுஞ் செய்யுள் உணர்த்துதல் நுதலிற்று.

வழக்கச் சொல்லினானே தொடுக்கப்பட்டு ஆராய வேண்டாமற் பொருள் தோன்றுவது புலனென்னுஞ் செய்யுளாம் என்றவாறு.


உதாரணம்

"பாற்கடல் முகந்த பருவக் கொண்மூ
வார்ச்செறி முரசின் முழங்கி ஒன்னார்
மலைமுற் றின்றே வயங்குதுளி சிதறிச்
சென்றவள் திருமுகங் காணக் கடுந்தேர்
இன்றுபுகக் கடவுமதி பாக உதுக்காண்
மாவொடு புணர்ந்த மாஅல் போல
இரும்பிடி யுடைய தாகப்
பெருங்காடு மடுத்த காமர் களிறே."

(யாப்.வி.ப.379)

எனவரும்.
(229)

1.(பாடம்) சேரி