என்-னின் நிறுத்தமுறையானே இழைபாமாறு உணர்த்துதல் நுதலிற்று. ஒற்றொடு புணர்ந்த வல்லெழுத்தடங்காது ஆசிரியப்பாவிற் கோதப்பட்ட நாலெழுத்தாதியாக இருபதெழுத்தின் காறும் உயர்ந்த பதினேழு நிலத்தும் ஐந்தடியும் முறையானே வரத்தொடுப்பது இழைபு என்னும் செய்யுளாம் என்றவாறு. உதாரணம்"பேர்ந்து பேர்ந்து சார்ந்து சார்ந்து தேர்ந்து தேர்ந்து மூசி நேர்ந்து வண்டு சூழ விண்டு நீங்கி நீர்வாய்க் கொண்ட நீல மூர்வாய் ஊதை வீச ஊர வாய மதியேர் நுண்டோ டொல்கி மாலை நன்மணங் கமழும் பன்னல் லூர அமையேர் வளைத்தோள் அம்பரி நெடுங்கண் இணையீர் ஒதி ஏந்திள வனமுலை இரும்பன் மலரிடை எழுந்த மாவின் நறுந்தழை துயல்வருஞ் செறிந்தேந் தல்குல் அணிநகை நசைஇய அரியமர் சிலம்பின் மணிமருள் வார்குழல் வளரிளம் பிறைநுதல் ஒளிநிலவு வயங்கிழை உருவுடை மகளிரொடு நளிமுழவு முழங்கிய அணிநிலவு மணிநகர் இருந்தளவு மலரளவு சுரும்புலவு நறுந்தொடையலள் கலனளவு கலனளவு நலனளவு நலனளவு பெருமணம் புணர்ந்தனை யென்பவஃ தொருநீ மறைப்ப ஒழிகுவ தன்றே." (யாப்.வி.ப.380) எனவரும்.(230)
1.அவையாவன கலியும் பரிபாடலும் போலும் இடைப்பாட்டாகிய செந்துறை மார்க்கத்தன என்பது.இவற்றுக்குக் காரணம் தேர்தல் வேண்டாது பொருள் இனிது விளங்கல் வேண்டும் என்றது.(தொல், பொருள். 554. பேரா.) 2.(பாடம்) தடக்காது. 3.ஆங்கன.
|