இஃது, எய்தாதது எய்துவித்தல் நுதலிற்று. (இ-ள்) புறத்திணை மருங்கின் பொருந்தின் அல்லது - ஒருவர் பெயர் புறத்திணை மருங்கிற் பொருந்தினல்லது, அகத்திணை மருங்கின் அளவுதல் இல - அகத்திணை மருங்கின் வருதல் இல்லை. [ஏகாரம் ஈற்றசை]. இதனாற் சொல்லியது ஒருவர்க்குரித்தாகி வரும்பெயர் அகத்திணை பற்றி வரும் கைக்கிளை பெருந்திணையினும் வரப் பெறாது என்பதூஉம், புறத்திணையுள் வரும் என்பதூஉம். ஆண்டும் பாடாண் பாட்டுக் காமம் பொருளாக வரின் அவ்வழி வரூஉம் என்பதூஉம் கூறியவாறு. இதனான் அகப்பொருள் ஒருவரைச் சாராது பொதுப்பட வருமென்பது கொள்க. (58) முதலாவது அகத்திணை இயல் முற்றிற்று.
1. "புறத்திணை கருப்பொருளாயும் அதுதான் உவமமாயும் அகத்திணையுட்கலக்கு மென்பதூஉம் இதனானே விரித்தாராயிற்று. அளவும் எனவே ஒரு செய்யுட்கண்ணும் அப்புறத்திணையாகிய இயற் பெயர்களும் சிறப்புப்பெயர்களும் ஒன்றே அன்றிப் பலவும் வருதலுங்கொள்க. (நச்சி.)
|