இத் தலைச்சூத்திரம் என் நுதலிற்றோவெனில் வெட்சித்திணைக்கு இடமும் துறையும் என்று வரும் புறப்பொருள் என்று கொள்க. (இ-ள்) அகத்திணை மருங்கின் அரில்தப உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் திறப்படக் கிளப்பின் - அகத்திணை யிடத்து மயக்கம் கெட உணர்ந்தோர் புறத்திணை இலக்கணம் வகைப்படக் கூறின். அகத்திணை மருங்கின் மயக்கம் கெட உணர்தலாவது, மேல் ஓதிய இலக்கணத்தால் மயக்கம் கெட உணர்தல். வெட்சிதானே குறிஞ்சியது புறனே - வெட்சி என்னும் திணை குறிஞ்சி என்னும் திணைக்குப் புறனாம். வெட்சி குறிஞ்சிக்குப் புறனாயது எவ்வாறெனின், நிரைகோடல் குறிஞ்சிக்குரிய மலைசார்ந்த நிலத்தின்கண் நிகழ்தலானும், அந்நிலத்தின் மக்களாயின் பிறநாட்டு ஆன் நிரையைக் களவிற்கோடல் ஒரு புடை குறிஞ்சிக்கு உரித்தாகிய களவோடு ஒத்தலானும், அதற்கு அது புறனாயிற்று என்க. சூடும் பூவும் அந்நிலத்திற்குரிய பூவாதலானும் அதற்கு அது புறமாம். உட்குவரத் தோன்றும் ஈர் ஏழ் துறைத்தே - வெட்சித்துறை உட்கு வரத்தோன்றும் பதினான்கு துறையை உடைத்து. துறை பதினான்கும் வருகின்ற சூத்திரத்துள் காட்டுதும். (1)
1. அரில்தப உணர்ந்தோர் என்றது; அகத்திணைக்கண் முதல் கரு உரிப்பொருள் கூறிய குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் என்பனவற்றிற்கு வெட்சி வஞ்சி உழிஞை தும்பை என்பன அவ்வவ் விலக்கணங்களோடு ஒரு புடை ஒப்புமை பற்றிச் சார்புடைய வாதலும், நிலமில்லாத பாலை பெருந்திணை கைக்கிளை என்பனவற்றிற்கு வாகையும் காஞ்சியும் பாடாண் திணையும் பெற்ற இலக்கணத்தோடு ஒருபுடை ஒப்புமை பற்றிச் சார்புடையவாதலும் கூறுதற்கு. (நச்சி.)
|