புறத்திணை இயல்

62மறங்கடைக் கூட்டிய குடிநிலை1 சிறந்த
கொற்றவை நிலையும் அத்திணைப் புறனே.

இதுவும் அது.

(இ-ள்) மறம் கடை கூட்டிய குடி நிலை - மறத்தொழில் முடித்தலையுடைய குடியினது நிலைமையைக் கூறலும், சிறந்த கொற்றவை நிலையும் - சிறந்த கொற்றவையது நிலைமையைக் கூறலும், அ திணை புறன் - குறிஞ்சித்திணைப் புறனாகிய வெட்சித் திணையாம்.

குடிநிலை என்றதனால் மைந்தர்க்கும் மகளிர்க்கும் பொதுவாதல் அறிக.

உதாரணம்

"யானை தாக்கினும் அரவுமேற் செலினும்
நீல்நிற விசும்பின் வல்லேறு சிலைப்பினும்
சூல்மகள் மாறா மறம்பூண் வாழ்க்கை
வலிக்கூட் டுணவின் வாட்குடிப் பிறந்த
புலிப்போத் தன்ன புல்லணற் காளை
செந்நா யன்ன கருவிற் சுற்றமொடு
கேளா மன்னர் கடிபுலம் புக்கு
நாளா தந்து நறவுநொடை தொலைச்சி
இல்லக் கள்ளின் தோப்பி பருகி
மல்லல் மன்றத்து மதவிடை கெண்டி
மடிவாய்த் தண்ணுமை நடுவட் சிலைப்பச்
சிலைகவி லெறுழ்த்தோள் ஓச்சி வலன்வளையூப்
பகன்மகிழ் தூங்கும் தூங்கா இருக்கை."

(பெரும்பாண். 134 - 146)

"முளிதலை களித்தவர் உள்ளுங் காதலில்
தனக்குமுகந் தேந்திய பசும்பொன் மண்டை
இவற்கீ கென்னு மதுவுமன் றிசினே
கேட்டியோ வாழி பாண பாசறைப்
பூக்கோள் இன்றென் றறையும்
மடிவாய்த் தண்ணுமை இழிசினன் குரலே."

(புறம்.289)

"கெடுக சிந்தை கடிதிவள் துணிவே
மூதில் மகளிர் ஆதல் தகுமே
மேனாள் உற்ற செருவிற்கு இவள் தன்ஐ
யானை எறிந்து களத்தொழிந் தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள்கொழுநன்
பெருநிரை விலங்கி ஆண்டுப்பட்டனனே;

இன்றும்,
செருப்பறை கேட்டு விருப்புற்று மயங்கி
வேல்கைக் கொடுத்து வெளிதுவிரித்து உடீஇப்
பாறுமயிர்க் குடுமி எண்ணெய் நீவி
ஒருமகன் அல்லது இல்லோள்
செருமுகம் நோக்கிச் செல்கென விடுமே"

(புறம்.279)

இவற்றுள் ஆண்பால் பற்றி வந்ததனை இல்லாண்முல்லை யெனவும், பெண்பால் பற்றி வந்ததனை மூதின்முல்லை யெனவும் கூறுப.

'கொற்றவை நிலை' என்றதனானே, குறிஞ்சித் திணைக்கு முருகவேளே யன்றிக் கொற்றவையும் தெய்வம் என்பது பெற்றாம்.

உதாரணம்

"ஆளி மணிக்கொடிப் பைங்கிளிப் பாய்கலைக்
கூளி வலிபடைக் கொற்றவை - மீளி
அரண்முருங்க ஆகோள் கருதின் அடையார்
முரண்முருங்கத் தான்முந் துறும்"

(புறப் - வெட்சி.20) (4)

1.துடிநிலை.