புறத்திணை இயல்

87கொடுப்போர் ஏத்திக் கொடா அர்ப் பழித்தலும்
அடுத் தூர்ந் தேத்திய இயல்மொழி வாழ்த்தும்
சேய்வரல் வருத்தம் வீட வாயில்
காவலர்க் குரைத்த கடைநிலை யானும்
கண்படை கண்ணிய கண்படை நிலையும்
கபிலை கண்ணிய வேள்வி நிலையும்
வேலை நோக்கிய1 விளக்கு நிலையும்
வாயுறை வாழ்த்தும் செவியறி வுறூஉவும்2
ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும்
கைக்கிளை வகையோடு உளப்படத் தொகைஇத்
தொக்க நான்கும் உளவென மொழிப .

இது , பாடாண்திணைக்குத் துறையாமாறு உணர்த்துதல் நுதலிற்று.

(இ-ள்) ' கொடுப்போ ரேத்திக் கொடாஅர்ப் பழித்தல் , முதலாக ' வேலை நோக்கிய விளக்குநிலை ' ஈறாகச் சொல்லப் பட்டனவும் , ' வாயுறை வாழ்த்து ' முதலாகக் ' கைக்கிளை ' உளப்பட்ட நால்வகையும் பாடாண்திணைக்குத் துறையாம் என்று சொல்லுவர் புலவர் என்றவாறு.

கொடுப்போர் ஏத்திக் கொடாஅர்ப் பழித்தல் என்றது கொடுப்போர் ஏத்தல் எனவும் , கொடார்ப் பழித்தல் எனவும் , கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் எனவும் மூவகைப்படும்.

இதனாற் பெற்றது , ஈவோரைப் புகழ்தலும் , ஈயாதோரைப் பழித்தலும் . ஈவோரைப் புகழ்ந்து ஈயாதோரைப் பழித்தலும் என்றவாறு.

கொடுப்போர் ஏத்தல் வருமாறு

"தடவுநிலைப் பலவின் நாஞ்சிற் பொருநன்
மடவன் மன்ற செந்நாப் புலவீர்
வளைக்கை விறலியர் படப்பைக் கொய்த
அடகின் கண்ணுறை யாக யாம்சில
அரிசி வேண்டினேம் ஆகத் தான்பிற
வரிசை அறிதலில் தன்னுந் தூக்கி
இருங்கடறு வளைஇய குன்றத்து அன்னதோர்
பெருங்களிறு நல்கி யோனே அன்னதோர்
தேற்றா ஈகையும் உனதுகொல்
போற்றார் அம்ம பெரியோர்தங் கடனே,"

( புறம் . 140)

" பாரி பாரி யென்றுபல ஏத்தி
ஒருவற் புகழ்வர் செந்நாப் புலவர்
பாரி ஒருவனும் அல்லன்
மாரியும் உண்டீண்டு 3 உலகுபுரப் பதுவே."

( புறம்.107)
கொடார்ப் பழித்தல் வருமாறு

" ஒல்லுவது ஒல்லும் என்றலும் யாவர்க்கும்
ஒல்லாது அல்லென மறுத்தலும் இரண்டும்
ஆள்வினை4மருங்கிற் கேண்மைப் பாலே
ஒல்லாது ஒல்லும் என்றலும் ஒல்லுவது
இல்லென மறுத்தலும் இரண்டும் வல்லே
இரப்போர் வாட்டலும் அன்றியும் புரப்போர்
புகழ்குறை படூஉம் வாயில் அத்தை
அனைத்தா கியர்இனி இதுவே எனைத்தும்
சேய்த்துக் காணாது 5 கண்டனம் அதனான்
நோயில ராகநின் புதல்வர் யானும்
வெயிலென முனியேன் பனியென மடியேன்
கல்குயின் றன்ன என் நல்கூர் வளிமறை
நாணலது இல்லாக் கற்பின் வாள்நுதல்
மெல்லியற் குறுமகள் உள்ளிச்
செல்வல் அத்தை சிறக்கநின் நாளே."

(புறம்.196)
கொடுப்போர் ஏத்திக் கொடார்ப் பழித்தல் வருமாறு

"களங்கனி அன்ன கருங்கோட்டுச் சீறியாழ்ப்
பாடின்6 பனுவற் பாணர் உய்த்தெனக்
களிறில வாகிய புல்லரை நெடுவெளிற்
கான மஞ்ஞை கணனொடு சேப்ப
ஈகை அரிய இழையணி மகளிரொடு
சாயின் றென்ப ஆஅய் கோயில்
சுவைக்கினி தாகிய குய்யுடை அடிசில்
பிறர்க்கீ வின்றித் தம்வயி றருத்தி
உரைசால் ஓங்குபுகழ் ஒரீஇய
முரைசுகெழு செல்வர் நகர்போ லாதே."

(புறம்.127)

இதனுள் ஏத்தப்பட்டவன் ஆய். பழிக்கப்பட்டவர் செல்வர் .

அடுத்து ஊர்ந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும் - வென்றியும் குணனும் அடுத்துப் பரந்து ஏத்திய இயல்மொழி வாழ்த்தும் .

அஃது, இயல்மொழி எனவும் , வாழ்த்து எனவும் , இயல்மொழி வாழ்த்து எனவும் மூவகைப்படும்.

உதாரணம்

"ஊர்க்குறு மாக்கள் வெண்கோடு கழாஅலின்
நீர்த்துறை படியும் பெருங்களிறு போல
இனியை பெரும எமக்கே மற்றதன்
துன்னருங் கடாஅம் போல
இன்னாய் பெருமநின் ஒன்னா தோர்க்கே "

(புறம் . 14 )

இஃது இயல்மொழி.

"ஆன்முலை அறுத்த அறனி லோர்க்கும்
மாணிழை மகளிர் கருச்சிதைத் தோர்க்கும்
குரவர்த் 7தப்பிய கொடுமை யோர்க்கும்
வழுவாய் மருங்கிற் கழுவாயும் உளவென8
நிலம்புடை பெயர்வ தாயினும் ஒருவன்
செய்தி கொன்றோர்க்கு உய்தி இல்லென
அறம்பாடிற்றே ஆயிழை கணவ
காலை அந்தியும் மாலை அந்தியும்
புறவுக் கருவன்ன புன்புல வரகின்
பாற்பெய் புன்கம் தேனொடு மயக்கிக்
குறுமுயற் கொழுஞ்சூடு கிழித்த ஒக்கலொடு
இரத்தி நீடிய அகன்தலை மன்றத்துக்
கரப்பில் உள்ளமொடு வேண்டுமொழி பயிற்றி
அமலைக் கொழுஞ்சோறு ஆர்ந்த பாணர்க்கு
அகலாச் செல்வம் முழுவதுஞ் செய்தோன்
எங்கோன் வளவன் வாழ்க என்றுநின்
பீடுகெழு நோன்தாள் பாடேன் ஆயின்
படுபறி யலனே பல்கதிர்ச் செல்வன்
யானோ தஞ்சம் பெருமிவ் வுலகத்துச்
சான்றோர் செய்த நன்றுண் டாயின்
இமயத்து ஈண்டி இன்குரல் பயிற்றிக்
கொண்டல் மாமழை பொழிந்த
நுண்பல் துளியினும் வாழிய பலவே . "

(புறம்.34)

இது வாழ்த்து.

" ஆவும் ஆனியற் பார்ப்பன மாக்களும்
பெண்டிரும் பிணியுடை யீரும் பேணித்
தென்புலம் வாழ்நர்க் கருங்கடன் இறுக்கும்
பொன்பொற் புதல்வர்ப் பெறாஅ தீரும்
எம் அம்பு கடிவிடுதும் நும்அரண் சேர்மினென
அறத்தாறு நுவலும் பூட்கை மறத்திற்
தொல்களிற்று மீமிசைக் கொடிவிசும்பு நிழற்றும்
எங்கோ வாழிய குடுமி தங்கோச்
செந்நீர்ப் பசும்பொன் வயிரியர்க் கீத்த
முந்நீர் விழவின் நெடியோன்
நன்னீர்ப் பஃறுளி மணலினும் பலவே."

(புறம் .9 )

இஃது இயல்மொழி வாழ்த்து .

" பார்ப்பார்க்கு அல்லது பணிபறி யலையே
பணியா உள்ளமொடு அணிவரக் கெழீஇ
நட்டோர்க் கல்லது கண்ணஞ் சலையே
வணங்குசிலை பொருதநின் மணங்கமழ் அகலம்
மகளிர்க்கு அல்லது மலர்ப்பறி யலையே
நிலந்திறம் பெயருங் காலை ஆயினும்
கிளந்த சொல்நீ பொய்ப்பறி யலையே
சிறியிலை உழிஞைத் தெரியல் சூடிக்
கொண்டி மிகைபடத் தண்டமிழ் செறித்துக்
குன்றுநிலை தளர்க்கும் உருமிற் சீறி
ஒருமுற் றிருவர் ஒட்டிய ஒள்வாள்
செருமிகு தானை வெல்போ ரோயே
ஆடுபெற்று அழிந்த மள்ளர் மாறி
நீகண் டனையேம் என்றனர் நீயும்
நும்நுகம் கொண்டினும் வென்றோய் அதனால்
செல்வக் கோவே சேரலர் மருக
கால்திரை எடுத்த முழங்குகுரல் வேலி
நனந்தலை உலகஞ் செய்தநன் றுண்டெனின்
அடையடுப் பறியா அருவி யாம்பல்
ஆயிர வெள்ள ஊழி
வாழி யாத வாழிய பலவே."

(பதிற்றுப்.63)

என்பதும் அது . பிறவும் அன்ன .

சேய்வரல் வருத்தம் வீட வாயில்காவலர்க்கு உரைத்த கடை நிலையும் - சேய்மைக்கண்ணின்று வருகின்ற வருத்தம் தீர வாயில் காவலர்க்கு உரைத்த வாயில் நிலையும் .

உதாரணம்

" வாயி லோயே வாயி லோயே
வள்ளியோர் செவிமுதல் வயங்குமொழி வித்தித்தாம்9
உள்ளியது முடிக்கும் 10 உரனுடை உள்ளத்து
வரிசைக்கு வருந்தும்இப் பரிசில் வாழ்க்கைப்
பரிசிலர்க்கு அடையா வாயி லோயே
கடுமான் தோன்றல் நெடுமான் அஞ்சி
தன்அறி யலன்கொல் என்னறி யலன்கொல்
அறிவும் புகழும் உடையோர் மாய்ந்தென
வறுந்தலை உலகமும் அன்றே அதனாற்
காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை
மரங்கொல் தச்சன் கைவல் சிறாஅர்
மழுவுடைக் காட்டகத் தற்றே
எத்திசைச் செலினும் அத்திசைச் சோறே."

(புறம்.206)

கண்படை 11 கண்ணிய கண்படைநிலையும் - இறைவன் கண்படை நிலையைக் குறித்த கண்படை நிலையும் .

என்றது , அரசன் இனிது துயின்றது கூறல் என்றவாறாம் .

உதாரணம்

" மேலார் இறைஅமருள் மின்னார் சினஞ்சொரியும்
வேலான் விறன்முனை வென்றடக்கிக் - கோலால்
கொடிய உலகில் குறுகாமை எங்கோன்
கடியத் துயிலேற்ற கண் ."

(புறப் பாடாண்.8)

கபிலை கண்ணிய வேள்விநிலையும் - கபிலையைக் குறித்த வேள்விநிலையும்.

உதாரணம்

" பருக்காழும் செம்பொன்னும் பார்ப்பார் முகப்பக்
குருக்கண் கபிலை கொடுத்தான் - செருக்கோடு
இடிமுரசத் தானை இகலிரிய எங்கோன்
கடிமுரசங் காலைச்செய் வித்து 12."

(புறப் பாடாண்.14)

வேலை நோக்கிய விளக்குநிலையும் - வேலினைக் குறித்த விளக்கு நிலையும். நோக்குதலாவது , விளக்கு ஏதுவாக வேவின் வெற்றியைக் காட்டுதல்.

உதாரணம்

" வளிதுரந்தக் கண்ணும் வலந்திரியாப் பொங்கி
ஒளிசிறந்தாங்கு 13 ஓங்கி வரலால் - அளிசிறந்து
நன்னெறியே காட்டும் நலந்தெரி கோலாற்கு
வென்னெறியே காட்டும் விளக்கு ."

(புறப். பாடாண்.12)

வாயுறை வாழ்த்தும் - வெஞ்சொல்லைப் பிரித்தலின்றிப் பிற்பயக்குமென்று வேம்பும் கடுவும்போல ஓம்படைக் கிளவியாலே மெய்யுறக் கூறுதலும் .

வாயுறை வாழ்த்தின் இலக்கணம்

"வாயுறை வாழ்த்தே வயங்க நாடின்
வேம்பும் கடுவும் போல வெஞ்சொல்
தாங்குதல் இன்றி வழிநனி பயக்குமென்று
ஓம்படைக் கிளவியின் வாயுறுத் தற்றே."

( தொல் . செய்யு . 108 )
உதாரணம்

" காய்நெல் அறுத்துக் கவளங் கொளினே
மாநிறைவு இல்லதும் பன்னாட் காகும்
நூறுசெறு ஆயினுந் தமித்துப்புக் குணினே
வாய்புகு வதனினுங் கால்பெரிது கெடுக்கும்
அறிவுடை வேந்தன் நெறியறிந்து கொளினே
கோடி யாத்து நாடுபெரிது நந்தும்
மெல்லியன் கிழவ னாகி வைகலும்
வரிசை அறியாக் கல்லென் சுற்றமொடு
பரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சின்
யானை புக்க புலம்போலத்
தானும் உண்ணான் உலகமுங் கெடுமே . "

(புறம் . 184)

செவியறிவுறூஉவும் - உயர்ந்தோர்மாட்டு அவிந்து ஒழுகுதல் வேண்டும் எனச் செவியறிவுறுத்துக் கூறுதலும்.

செவியுறையின் இலக்கணம் உதாரணம்

" செவியுறை தானே
பொங்குதல் இன்றிப் புரையோர் நாப்பண்
அவிதல்14 கடனெனச் செவியுறுத் தற்றே."

(தொல்.செய்யு.110)
உதாரணம்

" அந்தணர் சான்றோர் அருந்தவத்தோர் தம்முன்னோர்
தந்தைதாய் என்றிவர்க்குத் தார்வேந்தே - முந்தை
வழிநின்று பின்னை வயங்குநீர் வேலி
மொழிநின்று கேட்டல் முறை . "

( புறப். பாடாண் . 33 )

ஆவயின் வரூஉம் புறநிலை வாழ்த்தும் - மன்னன் இடத்ததாகி வரும் புறநிலை வாழ்த்தும். அது ,

உதாரணம்

" வழிபடு தெய்வம் நிற்புறங் காப்பப்
பழிதீர் செல்வமொடு வழிவழி சிறந்து
பொலிமின் என்னும் புறநிலை வாழ்த்தே "

( தொல் . செய்யு . 106 )

என்பதனால் , இனிது வாழ்மின் என்னும் பொருள்மேல் வரும் .

உதாரணம்

" தென்றல் இடைபோழ்ந்து தேனார் நறுமுல்லை
முன்றில் முகைவிரியும் முத்தநீர்த் தண்கோளுர்க்
குன்றமர்ந்த கொல்ஏற்றான் நிற்காப்ப - என்றுந்
தீரா நண்பின் தேவர்
சீர்சால் செல்வமொடு பொலிமதி சிறந்தே."

(யா.விரு , 55-மேற்கோள்)

கைக்கிளை வகையொடு - ஆண்பாற்கூற்றுக் கைக்கிளையும் பெண்பாற் கூற்றுக் கைக்கிளையும்.

இவையும் பாடாண் பாட்டாம் என்றவாறு.

உதாரணம்

" துடியடித் தோற்செவித் தூங்குகை நால்வாய்ப்
பிடியேயான் நின்னை இரப்பல் - கடிகமழ்தார்ச்
சேலேக வண்ணனொடு 15 சேரி புகுதலும்எம்
சாலேகம் சார நட"

(முத்தொள்.50)

எனவும் ,

" அணியாய செம்பழுக்காய் வெள்ளிலையோ டேந்திப்
பணியாயோ எம்பெருமான் என்று - கணியார்வாய்க்
கோள்நலங் கேட்பதூஉங் கொங்கர் பெருமானார்
தோள்நலஞ் சேர்தற் பொருட்டு "

எனவும் வரும் . பிறவும் அன்ன .

உளப்பட தொகைஇ தொக்க நான்கும் உள என மொழிப - உளம்படத் தொகைஇத் தொக்க நான்கும் (முன்னையவும் இத்திணைக்கு ) உள என மொழிப .

(26)

(பாடம்) 1. வேலின் நோக்கிய.

2. உறூஉம் .

(பாடம்) 3. உண்டிவ்.

4. மாண்வினை.

5. செய்து காணாதது.

6. பாட்டின்.

(பாடம்) 7. பார்ப்பார்த்.

8. உளவே.

(பாடம்) 9. விதைத்துத்தாம்.

10. விளைக்கும்.

11. கண்படை கண்ணிய என்றார் , கண்படை முடி பொருளாக இடை நின்ற உண்டி முதலியனவும் அடக்குதற்கு.

(தொல் புறம்.35) ( நச்சி. )

(பாடம்) 12. காலை செய்.

13. ஒளிசிறந்து.

(பாடம்) 14. நவிலுதல்

15. வண்ணன்எஞ் சேரிபுகுதுங்காற் .