இதுவும் அது . (இ-ள்) 'துயிலெடைநிலை ' முதலாகப் ' பரிசில் விடை ஈறாகச் சொல்லப்பட்டனவும் , நாளும் புள்ளும் நிமித்தமும் ஓம்படையும் உட்பட்ட உலக வழக்கின் அறியும் மூன்று காலமும் பற்றி வரும் பாடாண்திணை என்றவாறு. கிடந்தோர்க்கு தாவில் நல்இசை கருதிய சூதர் ஏத்திய துயில்எடை நிலையும் - கிடந்தோர்க்குக் கேடு இல்லாத நற்புகழைப் பொருந்த வேண்டிச் சூதர் ஏத்திய துயில் எடைநிலையும். உதாரணம்"அளந்த திறையார் அகலிடத்து மன்னர் வளந்தரும் வேலோய் வணங்கக் - கனந்தயங்கப் பூமலர்மேற் புள்ளொலிக்கும் பொய்மைசூழ் தாமரைத் தூமலர்க்கண் நேர்க துயில்". (புறப். பாடாண் . 9 ) கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றி பெற்ற பெருவளம் பெறார்க்கு அறிவுறீஇ சென்று பயன் எதிர சொன்ன பக்கமும் கூத்தராயினும் பாணராயினும் பொருநராயினும் விறலியாயினும் நெறியிடைக் காட்சிக்கண்ணே எதிர்ந்தோர் உறழ்ச்சியால் தாம் பெற்ற பெருவளன் நுமக்குப் பெறலாகும் எனவும் சொன்னபக்கமும்- . ' பக்கமும் ' என்றதினான் , ஆற்றினது அருமையும் அவன் ஊரது பண்பும் கூறப்படும். அவற்றுள், ,கூத்தராற்றுப்படை வருமாறு" திருமழை தலைஇய " ( மலைபடுகடாம் , 1 ) என்னும் பாட்டுட் காண்க. பாணாற்றுப்படை வருமாறு" பாணன் சூடிய பகம்பொன் தாமரை மாணிழை விறலி மாலையொடு விளங்கக் கடும்பரி நெடுந்தேர் பூட்டுவிட் டசைஇ ஊரீர் போலச் சுரத்திடை இருந்தனிர்4 யாரீ ரோவென வினவல் ஆனாக் காரென் ஒக்கற் கடும்பசி இரவல வென்வே லண்ணற் காணா ஊங்கே நின்னினும் புல்லியேம் மன்னே இனியே இன்னே மாயினேம் மன்னே யென்றும் உடாஅ போரா ஆகுதல் அறிந்தும் படாஅம் மஞ்ஞைக் கீத்த எங்கோ சுடாஅ யானைக் கலிமான் பேகன் எத்துணை யாயினும் ஈத்தல் நன்றென மறுமை நோக்கின்றோ அன்றே பிறர் வறுமைநோக் கின்றவன் கைவண் மையே." ( புறம் . 141) பொருநராற்றுப்படை வருமாறு" சிலையுலாய் நிமிர்ந்த சாந்துபடு மார்பின் புலிபுனல் கழனி வெண்குடைக் கிழவோன் வலிதுஞ்சு தடக்கை வாய்வாள் குட்டுவன் வள்ளியன் ஆதல் வையகம் புகழினும் உள்ளல் ஓம்புமின் உயர்மொழிப் புலவீர் யானும் , இருள்நிலாக் கழிந்த பகல்செய் வைகறை ஒருகண் மாக்கிணை தெளிர்ப்ப ஒற்றிப் பாடிமிழ் முரசின் இயல்தேர்த் தந்தை வாடா வஞ்சி பாடினேன் ஆக அகமலி உவகையோடு அணுகல் வேண்டிக் கொன்றுசினந் தணியாப் புலவுநாறு மருப்பின் வெஞ்சின வேழம் நல்கினன் அஞ்சி யானது பெயர்த்தனென் ஆகத் தான்அது சிறிதென உணர்ந்தமை நாணிப் பிறிதும்ஓர் பெருங்களிறு நல்கி யோனே அதற்கொண்டு இரும்பேர் ஒக்கல் பெரும்புலம்பு உறினும் துன்னரும் பரிசில் தருமென என்றுஞ் செல்லேன் அவன் குன்றுகெழு நாட்டே." ( புறம் . 394) விறலியாற்றுப்படை வருமாறு" மெல்லியல் விறலிநீ நல்லிசை செவியிற் கேட்பின் அல்லது காண்பறி யலையே காண்டல் வேண்டினை யாயின் மாண்டநின் விரைவளர் கூந்தல் வரைவளி உளரக் கலவ மஞ்ஞையிற் காண்வர இயலி மாரி யன்ன வண்மைத் தேர்வேள் ஆயைக் காணிய சென்மே . " ( புறம் . 133) சிறந்த நாளினிற் செற்றம் நீக்கிப் பிறந்த நாள்வயின் பெருமங்கலமும் - சிறந்த நாட்கண் உண்டாகிய செற்றத்தை நீக்கிப் பிறந்த நாட்கண் உளதாகிய பெருமங்கலமும். உதாரணம்" அந்தணர் ஆவொடு பொன்பெற்றார் நாவலர்6 மந்தரம்போல் மாண்ட களிறூர்ந்தார் - எந்தை இலங்கிலைவேல் கிள்ளி இரேவதிநாள் என்னோ சிலம்பிதன் கூடிழந்த வாறு " (முத்தொள் . 82) சிறந்த சீர்த்தி மண்ணுமங்கலமும் - ஆண்டுதோறும் முடிபுனையும் வழி நிகழும் மிகப் புண்ணிய நீராட்டு மங்கலமும் இதற்குச் செய்யுள் வந்தவழிக் காண்க . நடை மிகுத்து ஏத்திய குடை நிழல் மரபும் - ஒழுக்கத்தை மிகுத்து ஏத்தப்பட்ட குடைநிழல் மரபு கூறுதலும். உதாரணம் "திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் கொங்கலர்தார்ச் சென்னி குளிர்வெண் குடைபோன்றிவ் வங்க ணுலகளித்த லான்." (சிலப். மங்கல. 1) மாணார்ச் சுட்டிய வாள் மங்கலமும் - பகைவரைக் கருதிய வாள் மங்கலமும். உதாரணம்" பிறர்வேல் போலா தாகி இவ்வூர் மறவன் வேலோ பெருந்தகை உடைத்தே இரும்புற நீறும் ஆடிக் கலந்திடைக் குரம்பைக் கூரைக் கிடக்கினும் கிடக்கும் மங்கல மகளிரொடு மாலை சூட்டி7 இன்குரல் இரும்பை யாழொடு ததும்பத் தெண்ணீர்ப் படுவினுந் தெருவினும் திரிந்து மண்முழுது அழுங்கச் செல்லினுஞ் செல்லுமாங்கு இருங்கடல் தானை வேந்தர் பெருங்களிற்று முகத்தினுஞ் செலவா னாதே . " ( புறம் . 332) மன் எயில் அழித்த மண்ணு மங்கலமும் - நிலைபெற்ற எயிலை அழித்த மண்ணு நீராடு மங்கலமும் . இஃது உழிஞைப் படலத்துக் கூறப்பட்டதாயினும் மண்ணு நீராடுதலின் இதற்கும் துறையாயிற்று . இவ்வாறு செய்தனை எனப் புகழ்ச்சிக் கண் வருவது பாடாண் திணையாம் . இவ்வுரை மறத்துறை ஏழற்கும் ஒக்கும். உதாரணம் வந்தவழிக் காண்க. பரிசில் கடைஇய கடைக்கூட்டு நிலையும் - பரிசில் கடாவுதலாகிய கடைக்கூட்டு நிலையும். உதாரணம்" ஆடுநனி8 மறந்த கோடுயர் அடுப்பின் ஆம்பி பூப்பத் தேம்புபசி உழவாப் பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி இல்லி தூர்ந்த பொல்லா வறுமுலை சுவைத்தொறு அழூஉந்தன் மகத்துமுக9 நோக்கி நீரோடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என் மனையோள் எவ்வம் நோக்கி நினைஇ நிற்படர்ந் திசினே நற்போர்க் குமண என்நிலை யறிந்தனை யாயின் இந்நிலைத் தொடுத்துங் கொள்ளா தமையலென் அடுக்கிய பண் அமை10 முழவின் வயிரியர் இன்மை தீர்க்குங் குடிப்பிறந் தோயே." (புறம்.164) இன்னும் இதனானே, பரிசில்பெறப் போகல் வேண்டுமென்னும் குறிப்பும் கொள்க . உதாரணம்"நல்யாழ் ஆகுளி பதலையொடு சுருக்கிச் செல்லா மோதில் சில்வளை விறலி களிற்றுக்கணம் பொருத கண்ணகன் பறந்தலை விசும்பாடு எருவை பசுந்தடி தடுப்பப் பகைப்புல மரீஇ தகைப்பெருஞ் சிறப்பின் குடுமிக் கோமாற் கண்டு நெடுநீர்ப் புற்கை நீத்தனம் வரற்கே." ( புறம் . 64 ) பெற்ற பின்னரும் பெருவளன் ஏத்தி நடைவயின் தோன்றிய இருவகை விடையும் - பரிசில் பெற்ற பின்னரும் அவன் கொடுத்த மிக்க வளனை ஏத்தி வழக்கின்கண் தோன்றிய இருவகை . விடையும் அவையாவன , தான் போதல் வேண்டும் எனக் கூறுதலும் அரசன் விடுப்பப் போதலும். வளன் ஏத்தியதற்குச் செய்யுள்" தென்பரதவர் மிடல்சாய வடவடுகர் வாளோட்டிய தொடையமை11 கண்ணித் திருந்துவேல் தடக்கைக் கடுமா கடைஇய விடுபரி வடிம்பின் நற்றார்க் கள்ளின் சோழன் கோயில் புதுப்பிறை அன்ன சுதைசெய் மாடத்துப் பனிக்கயத் தன்ன நீள்நகர் நின்றென்12 அரிக்கூடு மாக்கிணை இரீய ஒற்றி எஞ்சா மரபின் வஞ்சி பாட எமக்கென வகுத்த அல்ல மிகப்பல மேம்படு சிறப்பின் அருங்கல வெறுக்கை தாங்காது மொழிதந் தோனே அதுகண்டு இலம்பாடு உழந்த என் இரும்பேர் ஒக்கல் விரற்செறி மரபின செவித்தொடக் குநரும் செவித்தொடர் மரபின செவித்தொடக் குநரும் அரைக்கமை மரபின மிடற்றியாக் குநரும் மிடற்றமை மரபின அரைக்கியாக் குநரும் கடுந்தெறல்13இராமன் உடன்புணர் சீதையை வலித்தகை அரக்கன் வௌவிய ஞான்றை நிலஞ்சேர் மதரணி கண்ட குரங்கின் செம்முகப் பெருங்கிளை இழைப் 14 பொலிந் தாஅங்கு அறாஅ வருநகை இனிதுபெற் றிகுமே இருங்கிளைத் தலைமை எய்தி அரும்படர் எவ்வம் உழந்ததன் தலையே ." (புறம் , 378 ) தான் பிரிதல் வேண்டிக் கூறியதற்குச் செய்யுள்" ஊனும் ஊணு முனையின் இனிதெனப் பாலிற் பெய்தவும் பாகிற் கொண்டவும் அளவுபு கலந்து மெல்லிது பருகி விருந்துறுத் தாற்றி இருந்தென15 மாகச் சென்மோ பெருமஎம் விழவுடை நாட்டென யாந்தன் னறியுநம் ஆகத் தான்பெரிது அன்புடை மையின் எம்பிரி வஞ்சித் துணரியது கொளா ஆகிப் பழமூழ்த்துப் பயம்பகர்வு அறியா மயங்கரின் முதுபாழ்ப் பெயல்பெய் தன்ன செல்வத்து ஆங்கண் ஈயா மன்னர் புறங்கடைத் தோன்றிச் சிதாஅர் வள்பிற் சிதர்ப்புறத் தடாரி ஊனுகிர் வலந்த தெண்கண் ஒற்றி விரல்விசை தவிர்க்கும் மரலையில் பாணியின் இலம்பாடு அகற்றன் யாவது புலம்பொடு தெருமரல் உயக்கமுந் தீர்க்குவெம்16 அதனால் இருநிலங் கூலம் பாறக் கோடை வருமழை முழக்கிடைக் கோடிய பின்றைச் சேயை யாயினும் இவணை யாயினும் இதற்கொண்டு அறிவை17 வாழியோ கிணைவ சிறுநனி , ஒருவழிப் படர்கென் றோனே எந்தை ஒலிவெள் அருவி வேங்கட நாடன் உறுவருஞ் சிறுவரும் ஊழ்மாறு உய்க்கும் அறத்துறை அம்பியின் மான மறப்பின்று இருங்கோள் ஈராப் பூட்கைக் கரும்ப னூரன் காதல் மகனே." ( புறம் . 381) அரசன் விடைகொடுப்பப் போந்தவன் கூற்று" நின்நயந்து உறைநர்க்கும் நீநயந்து உறைநர்க்கும் பன்மாண் கற்பின்நின் கிளைமுத லோர்க்கும் கடும்பின் கடும்பசி தீர யாழநின் நெடுங்குறி எதிர்ப்பை நல்கி யோர்க்கும் இன்னோர்க்கு என்னாது என்னொடுஞ் சூழாது வல்லாங்கு வாழ்தும் என்னாது நீயும் எல்லோர்க்கும் கொடுமதி மனைகிழ வோயே பழந்தூங்கு முதிரத்துக் கிழவன் திருந்துவேல் குமணன் நல்கிய வளனே." ( புறம் . 163) 'இருவகை விடையும் ' என்றதனால் , பரிசில் பெற்றவழிக் கூறுதலும் பெயர்ந்தவழிக் கூறுதலும் ஆம். அச்சமும் உவகையும் எச்சம் இன்றி நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் காலம் கண்ணிய ஓம்படை - அச்சமும் உவகையும் ஒழிவு இன்றி நாளானும் புள்ளானும் பிற நிமித்தத்தானும் காலத்தைக் குறித்த ஓம்படையும். அச்சமாவது , தீமை வரும் என்று அஞ்சுதல் உவகையாவது நன்மை வரும் என்று மகிழ்தல் , நாளாவது நன்னாள் தீநாள் . புள்ளாவன , ஆந்தை முதலியன , பிற நிமித்தமாவன , அலகு முதலாயின . காலங் கண்ணுதலாவது , வருங்காலங் குறித்தல். உதாரணம்"ஆடியல் அழற்குட்டத்து ஆர்இருள் அரையிரவின் முடப் பனையத்து வேர்முதலாக் கடைக்குளத்துக் கயங்காயப் பங்குனி உயர் அழுவத்துத் தலைநாண்மீன் நிலைதிரிய நிலைநாண்மீன் அதன் எதிர் ஏர்தரத் தொல்நாள்மீன் துறைபடியப் பாசிச் செல்லாது ஊசி முன்னாது அளக்கர்த்திணை விளக்காகக் கனையெரி பரப்பக் காலெதிர்பு பொங்கி ஒருமீன் விழுந்தன்றால்18 விசும்பி னானே அதுகண், டியாமும் பிறரும் பல்வே றிரவலர் பறையிசை அருவி நன்னாட்டுப் பொருநன் நோயில னாயின் நன்றுமற் றில்லென அழிந்த நெஞ்சம் மடியுளம் பரப்ப அஞ்சினம் " ( புறம் . 221 ) என்பது பிறவாறு நிமித்தம் கண்டு அஞ்சியது . ".................................... புதுப்புள் வரினும் பழம்புள் போகினும் விதுப்புறல் அறியா ஏமக் காப்பினை அனையை ஆகல் மாறே மன்னுயிர் எல்லாம் நின் அஞ் சும்மே . " ( புறம் . 20 ) என்பது புள்பற்றி வந்தது . " காலனுங் காலம் பார்க்கும் " ( புறம் . 41 ) என்னும் புறப்பாட்டு , நிமித்தம்பற்றி வந்தது . "நல்லது19செய்தல் ஆற்றீர் ஆயினும் அல்லது 20செய்தல் ஓம்புமின் ( புறம் . 195) என்பது ஓம்படைபற்றி வந்தது . உளப்படஞாலத்துவரும் நடக்கையது குறிப்பின் காலம் மூன்றொடு கண்ணிய வருமே - இவை உளப்படத் தோன்றும் வழக்கினது கருத்தினானே காலம் மூன்றனொடும் பொருந்தக் கருதுமாற்றான் வரும் மேற்கூறி வருகின்ற பாடாண்திணை.21 (30) இரண்டாவது புறத்திணை இயல் முற்றிற்று .
1. கிடந்தோர்க்கு எனப் பன்மை கூறவே , அவர் துயிலெடுப்புத் தொன்றுதொட்டு வரும் என்பதூஉம் . சூதர் , மாகதர் , வேதாளிகர் , வந்திகர் முதலாயினோருட் சூதரே இங்ஙனம் வீரத்தால் துயின்றாரைத் துயில் எடுப்புவர் என்பதூஉம் , யாண்டும் முன்னுள்ளோரையும் பிறரையும் கூறப்படும் என்பதூஉம் கொள்க. ( தொல். புறம் . 36 ) ( நச்சி. ) (பாடம்) 2. நாளணி. 3. தோன்றும். (பாடம்) 4. இருந்தீர். (பாடம்) 5. ஒலிகதிர்க். 6. பாவலர். (பாடம்) 7. சூடி. 8. ஆடுஎரி. 9. முகத்தினும். 10. மண்ணார். (பாடம்) 11. தொடியமை. 12. நின்றேன். 13. கடுந்தேர். 14. இழையணிப். (பாடம்) 15. இருந்தனே. 16. தீர்க்குவோம். 17. அறிகை,அறிகை. (பாடம்) 18. வீழ்ந்தன்றால். 19. நல்லவை. 20. அல்லவை. 21. பாடாண்திணை என்றது இவ்வழக்கியல் காலவேற்றுமை பற்றி வேறுபடுமாயின் , இவையும் இப் பொருளின்கண் வேறுபடா என்பது உணர்த்தியவாறு. அவை , பகைவர் நாட்டுப் பார்ப்பார் முதலியோரை ஆண்டுநின்றும் அகற்றிப் பொருதல் தலையாய அறம் . அதுவன்றிப் பொருள் கருதாது . பாதுகாவாதான் நிரையைத் தான் கொண்டு பாதுகாத்தல் அதனின் இழிந்த இடையாய அறம் . அதுவன்றிப் பிறர்க்கு அளித்தற்கு நிரை கோடல் நிகழினும் அஃது அதனினும் இழிந்த கடையாய அறம் எனப்படும். (தொல்.புறம். 36) (நச்சி.) |