களவியல்

90ஒன்றே வேறே என்றிரு பால்வயின்
ஒன்றி உயர்ந்த பால தாணையின்
ஒத்த கிழவனும் கிழத்தியும் காண்ப
மிக்கோ னாயினுங் கடிவரை இன்றே.

என் -எனின். இது காமக்கூட்டத்தின்கண் தலைமகனும் தலைமகளும் எதிர்ப் படுந்திறனும் அதற்குக் காரணமும் உணர்த்துதல் நுதலிற்று.

ஒன்றே வேறே என்றிரு பால்வயின் என்பது - ஒருவனும் ஒருத்தியுமாக இல்லறஞ் செய்துழி. அவ்விருவரையும் மறுபிறப்பினும் ஒன்றுவித்தலும் வேறாக்குதலுமாகிய இருவகை ஊழினும் என்றவாறு.

ஒன்றி உயர்ந்த பாலதாணையின் என்றது - இருவருள்ளமும் பிறப்புத் தோறும் ஒன்றி நல்வினைக்கண்ணே நிகழ்ந்த ஊழினது ஆணையின் என்றவாறு.

உயர்ந்ததன் மேற்சொல்லும் மனநிகழ்ச்சி உயர்ந்த பாலாயிற்று. காம நிகழ்ச்சியின்கண் ஒத்த அன்பினராய்க் கூடுதல் நல்வினையான் அல்லது வாராதென்பது கருத்து.

ஒத்த கிழவனுங் கிழத்தியுங் காண்ப என்பது---
ஒப்பு பத்துவகைப்படும். அவை,

"பிறப்பே குடிமை ஆண்மை ஆண்டோடு
உருவு நிறுத்த காம வாயில்
நிறையே அருளே உணர்வொடு திருவென
முறையுறக் கிளந்த ஒப்பினது வகையே."

(மெய்ப்.25)

என்னும் மெய்ப்பாட்டியற் சூத்திரத்துள் கூறிய பத்துமாம். அவற்றுள் பிறப்பாவது, அந்தணர், அரசர், வணிகர், வேளாளர், ஆயர், வேட்டுவர், குறவர், நுளையர் என்றாற்போல வருங் குலம். குடிமையாவது அக்குலத்தினுள்ளார் எல்லாருஞ் சிறப்பாக ஒவ்வாமையின் அச்சிறப்பாகிய ஒழுக்கம் பற்றிய குடிவரவைக் குடிமை என்றார்.

"பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் சிறப்பொவ்வா
செய்தொழில் வேற்றுமை யான்."

(குறள். 972)

எனப் பிறரும் குலத்தின்கண்ணே சிறப்பென்பது ஒன்றுண்டென்று கூறினாராகலின். ஆண்மையாவது, ஆண்மைத்தன்மை. அஃதாவது, ஆள்வினையுடைமையும் வலி பெயராமையுமாம்.

"மொழியா ததனை முட்டின்று முடித்தல்"

(மரபியல். 190)

என்பதனால் தலைமகள்மாட்டுப் பெண்மையும் கொள்ளப்படும். அது பெண்டிர்க்கு இயல்பாகிய நாணம் முதலாயினவும் பெண்ணீர்மையும். ஆண்டென்பது, ஒருவரினொருவர் முதியரன்றி ஒத்த பருவத்தராதல்; அது குழவிப்பருவங் கழிந்து பதினாறு பிராயத்தானும் பன்னிரண்டு பிராயத்தாளும் ஆதல். உருவு என்பது வனப்பு. நிறுத்த காமவாயில் நிலைநிறுத்தப்பட்ட புணர்ச்சிக்கு வாயில். அஃதாவது, ஒருவர் மாட்டு ஒருவர்க்கு நிகழும் அன்பு. நிறை என்பது அடக்கம். அருள் என்பது பிறர் வருத்தத்திற்குப் பரியும் கருணை, உணர்வென்பது அறிவு. திரு என்பது செல்வம் . இப்பத்து வகையும் ஒத்த கிழவனும் கிழத்தியும் எதிர்ப்படுவர் எனக் கொள்க.

1மிக்கோ... இன்றே என்பது-இக்குணங்களால் தலைமகன் மிக்கானாயினுங் கடியப்படாது என்றவாறு.

எனவே இவற்றுள் யாதானும் ஒன்றினாயினும் தலைமகள் மிக்காளாயின் ஐந்திணையிற் கடியப்படும் என்றவாறாம்.

பாலதாணையின்...காண்ப என்பது-ஒருவரையொருவர் கண்டுழியெல்லாம் புணர்ச்சி வேட்கை தோற்றாமையிற் பாலதாணையான் ஒருவரை யொருவர் புணர்தற் குறிப்பொடு காண்ப என்றவாறு. மிக்கோனாயினும் என்ற உம்மை இறந்தது தழீஇய எச்சவும்மை. எற்றுக்கு எதிர் மறையாக்கி `இழிந்தோனாயினும் கடியப்படாது' என்றாற் குற்ற மென்னை யெனின் செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி வருகின்ற பெருமையாதலின், இழிந்தானொடு உயர்ந்தாட்குளதாகிய கூட்டமின்மை பெருவழக்காதலின் அது பொருளாகக் கொள்ளப்படும் என்பது. ஈண்டுக் கிழவனும் கிழத்தியும் என ஒருவனும் ஒருத்தியும் போலக் கூறினாராயினும்.

"ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும்
வருவகை தானே வழக்கென மொழிப".

(பொருளியல்.26)

என்பதனாலும், இந்நூல் உலக வழக்கே நோக்குதலானும் அவர் பல வகைப்படுவர், அஃதாமாறு அந்தணர் அரசர் வணிகர் வினைஞர் என்னும் நால்வரொடும் அநுலோமர் அறுவரையும் ஊட்டப் பதின்மராவர். இவரை நால்வகை நிலத்தோடு உறழ நாற்பதின்மராவர் 2இவரையும் அவ்வந்நிலத்திற்குரிய ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னுந் தொடக்கத்தாரோடு கூட்டப் பலராவர். அவரையும் உயிர்ப் பன்மையான் நோக்க வரம்பிலராவர்.
(2)

1. "மிகுதலாவது குலம், கல்வி, பிராயம் முதலியவற்றான் மிகுதல். எனவே, அந்தணர் அரசர் முதலிய வருணத்துப் பெண்கோடற்கண் உயர்தலும் அரசர் முதலியோரும் அம்முறை உயர்தலும் கொள்க. இதனானே அந்தணர் முதலியோர் அங்ஙனம் பெண்கோடற்கட் பிறந்தோர்க்கும் இவ்வொழுக்கம் உரித்து என்று கொள்க. கடி-மிகுதி. அவர் அங்ஙனம் கோடற்கண் ஒத்த மகளிர் பெற்ற புதல்வரோடு ஒழிந்த மகளிர் பெற்ற புதல்வர் ஒவ்வார் என்பது உணர்த்தற்குப் பெரிதும் வரையப்படாதென்றார். பதினாறு தொடங்கி இருபத்து நான்கு ஈறாகக் கிடந்த யாண்டொன்பதும் ஒரு பெண்கோடற்கு மூன்று யாண்டாக அந்தணன் உயரும் கந்தருவமணத்து; ஒழிந்தோர் ஆயின் அத்துணை உயரார். இருபத்து நான்கு இரட்டி நாற்பத்தெட்டாதல் பிரமம் முதலியவற்றான் உணர்க. வல்லெழுத்து மிகுதல் என்றாற் போல மிகுதலைக் கொள்ளவே பிராயம் இரட்டியாயிற்று. கிழத்தி மிகுதல் அறக் கழிவாம்."

(நச்சி.)

2. `இவரொடும்' .