களவியல்

91சிறந்துழி1 ஐயஞ் சிறந்த தென்ப
இழிந்துழி இழிவே2 சுட்ட லான.

என் - எனின் ஐயம் நிகழும் இடம் உணர்த்துதல் நுதலிற்று.

ஒருவன் ஒருத்தியைக் கண்ணுற்றுழி அவ்விரு வகையும் உயர்வுடையராயின் அவ்விடத்து , ஐயம் சிறந்தது என்று சொல்லுவர் ; அவர் இழிபுடையராயின், அவ்விடத்து அவன் இழிபினையே சுட்டியுணர்தலான் என்றவாறு. சிறப்பு என்பது மிகுதி , ஐயமிகுதலாவது மக்களுள்ளாள் அல்லள் தெய்வமோ என மேலாயினாரோடே ஐயுறுதல் , சிறந்துழி என்பதற்குத் தலைமகள் தான் சிறந்துழியும் கொள்ளப்படும் ; அவளைக் கண்ட இடம் ஐயப்படுதற்குச் சிறந்துழியும் கொள்ளப்படும் . உருவ மிகுதியுடையளாதலின் ஆயத்தாரிடைக் காணினும் தெய்வம் என்று ஐயுறுதல் , இதனாற் சொல்லியது உலகத்துத் தலைமகனும் தலைமகளுமாக நம்மால் வேண்டப்பட்டார் அந்தணர் முதலாகிய நான்கு வருணத்தினும் ஆயர் வேட்டுவர் குறவர் பரதவர் என்னும் தொடக்கத்தினும் அக்குலத்தாராகிய குறுநில மன்னர்மாட்டு உளராவரன்றே; அவரெல்லாரினும் செல்வத்தானும் குலத்தானும் வடிவானும் உயர்ந்த தலைமகனும் தலைமகளுமாயினோர் மாட்டே ஐயம் நிகழ்வது . அல்லாதார் மாட்டும் அவ் விழிமரபினையே சுட்டியுணரா நிற்குமாதலான் என்றவாறு .

`காராரப் பெய்த' என்னும் முல்லைக் கலியுள்

( கலித் . 109)

"பண்ணித்3 தமர்தந் தொருபுறந் தைஇய
கண்ணி எடுக்கல்லாக் கோடேந் தகலல்குல்
புண்ணிலார் புண்ணாக நோக்கு முழுமெய்யுங்
கண்ணளோ4 ஆய மகள்".

என ஐயமின்றிச் சுட்டியுணர்ந்தவாறு காண்க.

இனி உயர்புள்வழி ஐயம் நிகழுமாறு :

"உயர்மொழிக் கிளவி உறழுங் கிளவி
ஐயக் கிளவி ஆடூஉவிற்கு உரித்தே."

[பொருளியல். 42]

என்றாராகலின், ஐயப்படுவான் தலைமகன் என்று கொள்க. தலைமகள் ஐயப்படாதது என்னையெனின். அவள் ஐயப்படுங்கால் தெய்வமோ வென்று ஐயுறல் வேண்டும். அவ்வாறு ஐயுற்றால் அச்சம் வரும். அஃது ஏதுவாகக் காம நிகழ்ச்சி யுண்டாகாது.


1. (பாடம்) "மகடூஉவின் ஆடூஉச்சிறத்தல் பற்றிச் சிறந்துழி என்றார்"

2. இழிபே.

3. மண்ணின் .

4. ஆயர் மகள்.