எண்வகைக் கூலமும், பொன்னும் மணியும் பிறவுமாகிய பொருள்களை ஈட்டலும், பொருள் பெற்று வழங்கலுமாகிய செயல்களைப் புரியும் வாணிகர்க்கும், வித்தி விளைவு செய்து உலகிற்களிக்கும் வேளாண் மாந்தர்க்கும், ஏனைய வினை வல்லார்க்கும், ஏவலர் முதலான மாந்தர்க்கும் மனையற வாழ்க்கை உலகியலான் பல்வேறு திறத்தனவாக அமைந்து நிகழ்ந்து வருதலின் அவை எல்லாம் அடங்க நாடக வழக்கினும் உலகியல் வழக்கினும் பாடல் சான்ற புலனெறி வழக்கிற்குரிய மரபுகளானமைந்த இலக்கணமாகும் என்றறிக. |
சூ. 144 : | கற்பெனப் படுவது கரணமொடு புணரக் |
| கொளற்குரி மரபிற் கிழவன் கிழத்தியைக் |
| கொடைக்குரி மரபினோர் கொடுப்பக்கொள் வதுவே |
க - து :
| கற்பொழுக்கமாவது கரணத்தொடு புணர்ந்த மங்கல வினையாகிய திருமணத்தை அடிப்படையாக் கொண்டு நிகழ்தலின் அவ்வடிப்படையாகிய திருமண நெறியாவது இதுவென்கின்றது. |
பொருள் : கற்பென்று சிறப்பித்துக் கூறப்படுவது கரணத்தொடு பொருந்தியமைய மகட்கோடற்குரிய முறைமையை உடைய தலைவன் தனக்கொத்த தலைவியைக் கொடுத்தற்குரிய முறைமையினை உடையார் மணஞ்செய்து கொடுப்ப வரைந்து கொள்வதாகும். |
கற்பென்னும் கைகோளின் பெயர் ஈண்டு ஆகுபெயராய் மணவினையைச்சுட்டி நின்றது. கரணமாவது ஒத்த கிழவனும் கிழத்தியும் இல்லறக் கிழமை பூண்டொழுகும் தகவும் உரிமையும் பெற மறைமொழியும் நிறைமொழியுமாகிய மந்திரங்களொடு முதுமொழிகளையும் கூறியும் கூறுவித்தும் பிற மங்கல வினைகளைச் செய்தும் செய்வித்தும் தலைமக்களைக் கூட்டுவிக்கும் நூல்நெறியொடு உலகியல் வழக்கினையும் தேர்ந்துணர்ந்த ஐயர்களான் வகுத்தமைக்கப் பெற்ற முறைமை (விதி) களாம். வதுவைச் சடங்கென்பார் இளம்பூரணர். வேள்விச் சடங்கென்பார் நச்சினார்க்கினியர். |
கொளற்குரி மரபிற்கிழவன் என்றது மெய்ப்பாட்டியலுள் கூறப்பெற்ற ஒத்த கிழவனை. கொடைக்குரி மரபினோர் என்றது இருமுது குரவரையும் அவரில்வழித் தன்னையரும். குரவரும், அந்தணரும், அரசனும் ஆகிய, சான்றோரை. கரணமொடு புணரக் கிழவன் கிழத்தியைக் கொள்ளும் திருமண வினை கற்பொழுக்கத்தின் அடிப்படைச் சிறப்பாதல் நோக்கி அதனையே கற்பென உபசரித்தார் நூலோர் என்க. |