116கற்பியல்
சூ. 145 : 

கொடுப்போ ரின்றியும் கரணம் உண்டே 

புணர்ந்துடன் போகிய காலை யான 

(2)
 
க - து :
 

மேற்கூறிய மணவினை பற்றியதொரு புறனடை கூறுகின்றது.
 

பொருள் : தலைவியின்   தமர்   வரைஉடம்படாதவழி      நிகழும்
உடன்போக்கின்கண்   கொடைக்குரிய   மரபினராய்க்       கொடுப்போர் இல்லாமலும் கற்புக்கடம் பூணுதலாகிய கரணம் நடைபெறுவது உண்டு.
 

ஆண்டுத்     தலைவன்   தமரே   கரணம்   நிகழ்த்துவர். அதனான்
கற்பொழுக்கத்திற்குக்   கரணம்   இன்றியமையாத தென்பதும், கரணமொடு
புணர்த்தலை மக்கள் மணவாவழி  அவர்தாம்   கூடி   வாழினும்   அஃது
இல்லறமாகாது என்பதும் உணர்த்தியவாறாம்.
 

"வெளிப்படை   தானே   கற்பினொடொப்பினும் ....  வரையாது பிரிதல்
இல்லை" (கள - 51) என்றதும் அக்கருத்தானே என்பது புலப்படும்.
 

எ - டு :

பறைபடப் பணிலம் ஆர்ப்ப இறைகொள்பு 

தொன்மூ தாலத்துப் பொதியிற் றோன்றிய 

நாலூர் கோசர் நன்மொழி போல 

வாயா கின்றே தோழி ஆய்கழற் 

செயலை வெள்வேல் விடலையொடு 

தொகுவளை முன்கை மடந்தை நட்பே.  

(குறு-15)
 

இதன்கண்   விடலையொடு   மடந்தை   நட்பு வாயாகின்று எனச் செவிலி
நற்றாய்க்குக் கூறுதலானும்-உவமத்தின்கண் பறை   படப்  பணிலம் ஆர்ப்ப
என்று கூறிய குறிப்பானும்  கொடுப்போரின்றிக் கரணம்   நிகழ்ந்து வதுவை
கூடினமை புலனாகும்.
 

'அருஞ்சுரம் இறந்த என் பெருந்தோட் குறுமகள்' (அகம்- 195) என்னும்
நெடுந்தொகையுள் எம்மனை  முந்துறத்   தருமோ தன்மனை உய்க்குமோ?
என நற்றாய் கூறுதலான்  உடன்போக்கின்கண   தங்கிய   சிற்றூர் மக்கள்
கரணம் செய்வித்தமை குறிப்பான் அறிக.
 

சூ. 146 : 

மேலோர் மூவர்க்கும் புணர்த்த கரணம் 

கீழோர்க் காகிய காலமு உண்டே 

(3)
 
க - து :
 

 கரணம் பற்றியதொரு வரலாறு கூறுகின்றது.
 

பொருள் : வண்புகழ்  மூவர்   தண்பொழில்  வரைப்பின்கண் பண்பும்
செயலும் குடிமையும் காரணமாக அந்தணர்,  அரசர்,   வணிகர், வேளாளர்
என நாற்பாலாக அமைந்துவரும் தமிழின