சான்றும் சான்றாளரும் பெறாமையான் இது தகவன்று எனப் பிறர் இடித்துரைக்குங்கால் யான் அவளை அறியேன் என மறைத்தலும், அவள் பால் தோன்றிய மக்கட்கு உரிமை நல்காமல் விலக்கி ஒழுகுமிடத்து மன்றத்தார் அழைத்து உசாவுங்கால் அவள் காமக்கிழத்தியேயன்றி மனைக் கிழத்தியல்லள் என வழுவுதலும் ஆகிய குற்றங்கள் ஒரோவிடத்துத் தோன்றிய பின்னர்க் காதலுணர்வும் கடமைப்பாடும் பழிக்கஞ்சுதலும் தலைவன் மாட்டு நிலைபெறவேண்டுமென எண்ணி மறைநெறி தேர்ந்த தலையாய சான்றோர் கரணத்தைச் சீர்பெற யாத்து அமைத்தனர் எனக் கூறுவர் நூலோர். |
பொய்யும் வழுவும் நிகழா வண்ணம் என்றோ, நிகழ்தலை நோக்கி என்றோ கூறாமல் "தோன்றிய பின்னர்" என்றதனான் இக்குற்றங்கள் சிலரான் தோற்றுவிக்கப் பெற்றதாதல் வேண்டும். வரலாற்றினை நோக்குமிடத்து மிகப் பழங்காலத்திலேயே வடவாரியர் தென்னகத்தே குடியேறித் தமிழரொடு நாளடைவிற் கலப்புற்றமை தெரிய வரும். அக்காலத்துச் சில பண்பாட்டுச் சிதைவுகள் நேர்தல் இயற்கையே. |
ஆரியர் வழக்கின்கண் கந்தருவ மணத்தாற் கூடிய இருவர் பின்னர்க் கற்பொழுக்கத்தினை ஏற்க `வேண்டுமென்னும் நியதி இன்மையானும், பிராமண வருணத்தான் ஒருவன் ஏனைய வருணத்துப் பெண்பாலாரை மணத்தல் கடியப்படாமையானும் கீழோரைக் கூடின் அவரை மணந்து கொள்ள வேண்டும் என்னும் கடப்பாடு இன்மையானும் இத்தகு குற்றங்கள் ஆங்காங்கே தோன்றியிருத்தல் வேண்டும். இதற்கு ஆரியரது சமுதாய நீதி நூல்களிலும் புராண இதிகாசங்களிலும் வேண்டுமளவிற்குச் சான்றுகள் உள்ளமை காணலாம். அத்தகு தீயொழுக்கம் தமிழரிடையே பரவா வண்ணம் தலையாய தமிழ்ச் சான்றோர் (ஐயர்) கரண முறையை வகுத்தனர் எனப் புலனாகின்றது. |
இனி, இந்நூற்பாக்களைச் சார்ந்து மேலும் சில சூத்திரங்கள் இருந்து கெட்டிருத்தல் வேண்டும் எனக்கருதவேண்டியுளது. வேறு சான்றுகள் கிட்டப் பெறாமையின் இந்நூல் நெறிக்குப் பொருந்த இவ்வுரை வரையப்பட்டுள்ளது. இவை மேலும் ஆராய்தற் குரியனவாகும். |
சூ. 148 : | கரணத்தின் அமைந்து முடிந்த காலை |
| நெஞ்சு தளையவிழ்ந்த புணர்ச்சிக் கண்ணும் |
| எஞ்சா மகிழ்ச்சி இகந்துவரு பருவத்தும் |