கற்பியல்121

பொருள் : 1)  கரணத்தின்   அமைந்து   முடிந்த   காலை   நெஞ்சு
தளையவிழ்ந்த புணர்ச்சிக்கண்ணும் என்பது :  கரணத்தினான்   மணவினை
நிகழ்ந்து முற்றிய பின்னர் அதுகாறும் கட்டுண்டிருந்த நெஞ்சத்தனை நீங்கித்
தான் வேண்டியாங்குத் தலைவியைக் கூடிய   கூட்டத்தின்கண்   தலைவன்
கூற்று நிகழும் என்றவாறு.
 

'தலைவன் கூற்று நிகழும்'    என்பதை   மேல்    வருவனவற்றோடும்
கூட்டிக்கொள்க. தளை    என்றது   களவின்கண்   தன்   பெருமைக்கும்
தலைவியது   நாண்   முதலியவற்றிற்கும்   இழுக்குநேருங்கொல்  எனவும்,
தம்குடிக்கும் குலத்திற்கும் மாசு நேருங்கொல்  எனவும், அலருக்கு அஞ்சிக்
கரந்தும் தன் தணியா வேட்கையை நெஞ்சத்து அடக்கியிருந்த   நிலையை.
அத்தளை வரைதலான் உரிமை பெற்றபின் தானே   ` நீங்கி    விடுதலின்
"அவிழ்ந்த"   என்றார்.   இது   கற்பொழுக்கத்தின்  முதற் கூட்டமாகலின்
தளையவிழ்தலே அதற்குச் சிறப்பாயிற்று.
 

எ - டு :

விரிதிரைப் பெருங்கடல் வளைஇய உலகமும் 

அரிதுபெறு சிறப்பின் புத்தேள் நாடும் 

இரண்டும் தூக்கின் சீர்சா லாவே 

பூப்போல் உண்கண் பொன்போல் மேனி 

மாண்வரி யல்குற் குறுமகள் 

தோள்மாறு படூஉம் வைகலொ டெமக்கே. 

(குறு-101)
 

எனவரும்.
 

2) எஞ்சா   மகிழ்ச்சி   இறந்துவரு   பருவத்தும் என்பது; தலைவியது
செயலும் பண்பும் ஒருகாலைக் கொருகால் சிறந்தோங்கி  வருதலை நோக்கி
ஒழியாத மகிழ்ச்சி தன்பால்   மிக்கு   வெளிப்படும்   பொழுதின்கண்ணும்
என்றவாறு.
 

எ - டு :

அறிதோ றறியாமை கண்டற்றாற் காமம் 

செறிதோறும் சேயிழை மாட்டு  

(குறள்-1110)
 

3) அஞ்ச  வந்த   உரிமைக்   கண்ணும் என்பது : அங்ஙனம் நிகழும்
எஞ்சா மகிழ்ச்சியை இடையீடு படுத்துதற்குரியவாய   தனது  கடமைகளைக்
கருதுதற் கண்ணும் என்றவாறு.
 

அவையாவன :   ஆட்சிப்பணியும்,   அவையகத்து  ஆற்றும் பணியும்
அறப்புறங்காவல் முதலியனவும், விழாநிகழ்த்தும் பொறுப்பு   முதலியனவும்
அவரவர்க்குரிய  இன்றியமையாத   கடமைகளுமாம்.   அவை    தமக்குக்
கடப்பாடாக அமைந்துள்ளமையின்