சொல்லுறு பொருள் என்றது இற்செறிப்புற்றும், அலரஞ்சியும், குறிவழிச் செல்லாத காலத்துத் தலைவன் ஆற்றியிருந்தமையை எடுத்துக் கூறுதலாம். |
எ - டு : | வந்துழிக் கண்டு கொள்க. |
8) சொல்லென, ஏனது சுவைப்பினும் நீ கை தொட்டது வானோர் அமிழ்தம் புரையுமால் எமக்கென அடிசிலு பூவும் தொடுதற் கண்ணும் என்பது : சுவைத்தற் கொவ்வாதது ஒன்றைச் சுவைப்பினும் நின்கையாற் தீண்டிய பொருளாயின் எமக்கது வானோரின் அமிழ்தினை ஒக்கும். அதற்குக் காரணம் சொல்வாயாக என, அவளிட்ட அடிசிலையும் தொடுத்த பூவினையும் தீண்டுதற் கண்ணும் என்றவாறு. |
எ - டு : | வேம்பின் பைங்காய்என் தோழி தரினே |
| தேம்பூங் கட்டி என்றனிர் |
| (குறு-196) |
இது தலைவன் முன்பு கூறியதனைத் தோழி பிறிதொரு அமையத்தின்கண் கொண்டு கூறியது. |
9) அந்தணர் திறத்தும் சான்றோர் தேஎத்தும் அந்தமில் சிறப்பின் பிறர் பிறர்திறத்தினும் ஒழுக்கங் காட்டிய குறிப்பினும் என்பது : செந்தண்மை பூண்டொழுகும் அந்தணர் பக்கத்தும் பண்பால் உயர்ந்த சான்றோரிடத்தும் ஈறில்லாத சிறப்பினையுடைய ஏனைய பிறரிடத்தும் ஒழுகும் முறைமையைத் தான் ஒழுகிக் காட்டிய குறிப்பின்கண்ணும் என்றவாறு. |
அந்தமில் சிறப்பிற் பிறர் என்றது இரு முதுகுரவரையும் முத்தோரையுமாம். பின்னும் பிறர் என்றது கேளிரையும் ஒக்கலையும் விருந்தினரையுமாம். |
எ - டு : | வந்துழிக் கண்டு கொள்க. |
10) ஒழுக்கத்துக் களவினுள் நிகழ்ந்த அருமையைப் புலம்பி அலமரலுள்ளமொடு அளவிய விடத்தும் என்பது: தான் ஒழுகிக் காட்டியவழி தலைவி ஒழுகுமிடத்துக் களவினுள் இங்ஙனம் கலந்துரையாடற்கு இயலாது நிகழ்ந்த அருமைப் பாட்டினைக் கூறி அன்றைய நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்குமாகச் சுழலும் நெஞ்சத்தொடு உரைக்குமிடத்தும் என்றவாறு. ஒழுக்கத்து என்றது நிகழ்ந்துவரும் கற்பொழுக்கத்தினையாம். அருமை என்றது காலம் அமர்ந்து தன்காதல் நெஞ்சம் புலப்பட உரையாடற்கியலாமல் குறியிடத்துக் காண்டலும் அலரஞ்சி நீங்கலுமாக நிகழ்ந்த நிலைமையை. புலம்பி என்றது புலப்படுத்தி என்றவாறு. |