புலம்பு என்பது தனிமை என்னும் பொருள்தருமிடத்து உரிச் சொல்லாம். ஏக்கத்தானும் இரக்கத்தானும் இளிவரவு தோன்றப் பேசுதல் என்னும் பொருள்தருமிடத்து வினைச் சொல்லாம். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
11) அந்தரத்து எழுதிய எழுத்தின்மான வந்த குற்றம் வழிகெட ஒழுகலும் என்பது : இருமுதுகுரவர் முதலாயினாரையும் தன்னையும் பேணி ஒழுகுமிடத்து அறியாமையான் தலைவி மாட்டு நிகழ்வனவாகிய குறை கருதத்தக்கவை யன்மையான் ஆகாயத்தின்கண் எழுதிய எழுத்து அக்கணமே மறையுமாறு போலத், தோன்றிய சுவடுமின்றிக்கெட அவள் மாட்டு அன்பு செய்தொழுகுதற்கண்ணும் என்றவாறு. |
இதற்கு உரையாசிரியன்மார் கூறும்பொருள் நூலோர் சிறப்பித்துக் கூறும் களவொழுக்கத்திற்கு மாசு கற்பிப்பதாகலின் ஒவ்வாமை புலப்படும். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
12) அழியல் அஞ்சல் என்று ஆயிரு பொருளினும் என்பது : பகை முதலாய பிரிவின்கண், வருந்தற்க எனவும் செல்லும் கொடிய வழிகளைக் கருதி அஞ்சற்க எனவும் கூறும் அவ்விரு பொருண்மைக்கண்ணும் என்றவாறு. தலைவி அழிதலும் அஞ்சலும் வெவ்வேறு பொருண்மை பற்றியவையாதலின் ஆயிரு பொருளினும் என்றார். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
13) தானவட் பிழைத்த பருவத்தானும் என்பது : தான் குறித்த பருவத்து மீண்டு வாராமல் பிழைபட்டுப் பருவம் நீட்டித்தவிடத்தும் என்றவாறு. தலைவியை வந்தடையாமல் பாசறை முதலியவற்றின்கண் காலந்தாழ்தலின் 'தானவட் பிழைத்த' என்றார். எ - டு : வந்துழிக் கண்டு கொள்க. |
14) நோன்மையும் பெருமையும் மெய்கொள அருளிப் பன்னல் சான்ற வாயிலொடு பொருந்தித் தன்னின் ஆகிய தகுதிக்கண்ணும் என்பது : பிரிவினைப் பொறுத்துறையும் நோன்மையும் துயர் பிறர் அறியாவண்ணம் மறைத்து மனையறம் ` புரியும் பெருமையும் பொருண்மையுறத் தண்ணளிசெய்து துனி தீரப் பேசுதலின் சிறந்த தோழி முதலிய வாயிலோரது கருத்தொடு பொருந்தி ஊடலைத் தவிர்ந்தொழுகும் தலைவியான் தனக்குண்டாகிய தகவினைக் கருதுமிடத்தும் என்றவாறு. |
அஃதாவது, தலைவன் தேவர்க்குச் சிறப்பும் பூசனையும் நிகழ்வித்தலும் கலைவல்லாரைப் பேணுதலும் இரவலர்க்கு |