பொருள் : பரத்தைமை காரணமாகத் தலைவன் இல்லற நெறியினின்று நெகிழ்ந்தொழுகாமற் காத்தல் தலைவியின் கடனென நூலோரான் கூறப்படுதலானும் புலவியைத் தணித்தல் வேண்டித் தலைவியிடத்தும் பணிமொழி கூறித் தாழ்தல் தலைவற்கு இயல்பாகலானும், புதல்வன் தாய் தலைவனை இடித்துரைத்து அறிவு மெய்ந் நிறுத்தலான் எய்தும் உயர்ச்சியும் தலைவனது உயர்ச்சியேயாகும். |
என்றது : மனையறத்தின்கண் தலைவி உயர்வு தலைவற்கு இழுக்காகாது. அவற்கும் உயர்வேயாம் என்றவாறு. அஃதாவது இல்லறக் கிழமை பூண்ட மனைவி தலைமைசெய் தொழுகலும் தலைவன் தலைவியைப் பணிந்தொழுகலும் வழுவாகா. அவை கற்பென்னும் கைகோட்குச் சிறப்பளிக்கும் ஊடலும் கூடலும் பற்றி நிகழ்வனவாதலின் இலக்கணமே என்றவாறு. இஃது ஓராற்றான் கற்பிற்குரிய இலக்கணமாதலின் பொருளியலுள் வையாது ஈண்டுவைக்கப்பட்டதென்க. |
சூ. 177 : | எண்ணரும் பாசறை பெண்ணொடும் புணரார் |
(34) |
க - து : | பகைவயிற் பிரிவின்கண் தலைவர்கட் காவதோரிலக்கணம் கூறுகின்றது. |
பொருள் :பகைவயிற் பிரிந்த தலைமக்கள் மற்றாரை வெல்லுமாறுபற்றி எண்ணும் அரிய பாசறையிடத்துத் தலைவியொடு சென்று பொருந்தியிரார். |
உம்மையான் பின்முறையாக்கிய மனைவியொடும் தொன் முறை மனைவியொடும் சென்று பொருந்தியிரார் எனக்கொள்க. 'புறத்தோர் ஆங்கட் புணர்வதாகும்' எனமேல் வருதலின் ஈண்டுப் பெண் என்றது தலைவியை என்பது தெளிவாம். எண்ணுதலாவது தானைத்தலைவரொடும் ஒற்றர் முதலாயினரொடும் சூழ்தல். |
ஒருகை பள்ளி யொற்றி ஒருகை |
முடியொடு கடகஞ் சேர்த்தி நெடிதுநினைந்து |
பகைவர்ச் சுட்டிய படைகொள் நோன்விரல் |
நகைதாழ் கண்ணி நன்வலந் திருத்தி |
அரசிருந்து பணிக்கும் முரசுமுழங்கு பாசறை |
(முல்.74-78) |
எனவருவனவற்றான் எண்ணுமாறறிக. |
சூ. 178 : | புறத்தோர் ஆங்கட் புரைவ தென்ப |
க - து : | மேலதற்கொரு புறனடை கூறுகின்றது. |