பொருள் :எண்ணரும் பாசறைக்கண் ஆடலும் பாடலும் நிகழ்த்தும் புறத்தோராய பரத்தையரொடு சென்று இருத்தல் பொருத்துவதாகும் எனக் கூறுவர் புலவர். அவர் படை மறவர் அயர்ச்சி நீங்கப் பாடியும் ஆடியும் இன்புறுத்தற்கும் வெற்றி பெற்றவிடத்துக் குரவை முதலாய கூத்தியற்றுதற்கும் உரியராகலின் 'புரைவதாகும்' என்றார். |
சூ. 179 : | காமநிலை யுரைத்தலும் தேர்நிலை யுரைத்தலும் |
| கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறலும் |
| ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் |
| செலவுறு கிளவியும் செலவழுங்கு கிளவியும் |
| அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய |
(36) |
க - து : | தலைமகற்குப் பாங்கராகவும் வாயிலாகவும் விளங்கும் நூலறிவு சான்ற பார்ப்பார்க்குரிய கிளவியாமாறு கூறுகின்றது. |
பொருள் : காமநிலை உரைத்தலும் என்பது = காமத்தின் நன்மை அன்மைகளை விளக்கிக் கூறுதலாம். அதனான் பிரிவாற்றுதல் வேண்டும் என்னும் அறிவினையும் தலைவன் காவல் முதலாய கடமைகளைக் காலத்தொடு ஆற்றவேண்டுமென்னும் அறிவினையும் பெறவைத்தலாம். தேர்நிலை யுரைத்தலும் என்பது = தலைவனது ஊர்தியாகிய தேர்நிலையைக் கூறுதலாம். அஃதாவது தலைவன் நகரத்தான், நகர்ப்புறத்தான், சேரியகத்தான், ஊர்ப்புறத்தான், போர்முகத்தான் என அவன் மேற்கொண்டுள்ள ஒழுகலாற்றினை அவன் தேரினைச் சுட்டியுணர்த்துதலாம். தலைவனது தேரினைக் கொண்டு அவனது நிலையை உரைத்தல் என்பது கருத்து. கிழவோன் குறிப்பினை எடுத்துக் கூறல் என்பது = தலைவனது காதற்குறிப்பினையும் செலவுக்குறிப்பினையும் தலைவியிடத்து விளங்கச் சொல்லுதலாம். ஆவொடு பட்ட நிமித்தங் கூறலும் என்பது = ஆவினாற்றோன்றிய நிமித்தத்தான் நேரும் நன்மை தீமைகளை எடுத்துக் கூறுதலாம். செலவுறு கிளவியும் என்பது = தலைவன் காவல் முதலிய பிரிவு கருதிய வழிச்செலவு நன்றாமென உரைத்தலாம். செலவழுங்கு கிளவியும் என்பது = இது பொழுது ஒவ்வாது எனச் செலவினைத் தவிரக் கூறுதலாம். அன்னவை பிறவும் பார்ப்பார்க் குரிய = அவைபோல்வனவாகிய பிறகிளவிகளும் நூலறிவு சான்ற பார்ப்பார்க்கு உரியவாகும். |
பார்ப்பாராவார் நூலணிந்து நூலோதும் இருபிறப்பாளராவார். இதனை "மறப்பினும் ஓத்துக் கொளலாகும் |